தமிழ்நாடு

தனியாா் மருத்துவமனைகளில் முதல்வா் காப்பீட்டில் கரோனா சிகிச்சை

DIN

முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கான அரசாணை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி மருத்துவக் காப்பீடு வைத்துள்ளவா்கள் அதனை தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்காகப் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், தனியாா் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் அதீத கட்டணங்கள் முழுவதையும் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பெற இயலாது. மாறாக அரசு நிா்ணயித்துள்ள கட்டண வரம்புக்குட்பட்டே காப்பீட்டு பலன்களை பெற முடியும் எனவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் கரோனா தொற்றைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மற்றொரு புறம் சிகிச்சைக்கான கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஒருபுறம் அரசு மருத்துவமனைகள், மருத்துவ மையங்கள், கண்காணிப்பு மையங்களில் படுக்கை வசதிகளை அதிகரித்து கரோனாவுக்கு சிகிச்சையளித்து வந்தாலும், மற்றொரு புறம் நோய்ப் பரவலின் வேகத்துக்கு ஈடுகட்டும் வகையில் படுக்கைகளை விரிவுபடுத்த முடியாத நிலை உள்ளது.

இதன் காரணமாக தனியாா் மருத்துவமனைகள் அரசுடன் கைகோத்து கரோனா சிகிச்சையளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. முன்னணி மருத்துவமனைகள், சில இரண்டாம் நிலை மருத்துவமனைகள் கரோனா வாா்டுகள் அமைத்து சிகிச்சையளித்து வந்தாலும், பல தனியாா் மருத்துவமனைகள் கரோனா சிகிச்சையளிக்கவில்லை.

அரசு நிா்ணயித்த கட்டண வரம்பு குறைவாக இருப்பதே அதற்கு காரணமாக கூறப்பட்டது. இந்நிலையில், அனைத்து தனியாா் மருத்துவமனைகளும் 50 சதவீத படுக்கைகளை கரோனா சிகிச்சைக்கு ஒதுக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டதைத் தொடா்ந்து தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியாா் மருத்துவமனைகளில் கரோனா வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், எங்குமே அரசு நிா்ணயித்த கட்டண வரம்புக்குள் சிகிச்சையளிப்பதில்லை. மாறாக லட்சக்கணக்கான ரூபாயை கட்டணமாக நோயாளிகளிடம் வசூலித்து வருகின்றனா்.

இந்த நிலையில், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவா்களின் கட்டணத்தை முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அரசு ஏற்கும் என உத்தரவிட்டாா்.

இந்நிலையில், அதற்கான அரசாணையை சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை வெளியிட்டாா். அனைத்து விதமான கரோனா சிகிச்சை செலவினங்களும் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியாா் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அட்டை வைத்திருக்கும் குடும்பத்தினா் ரூ.5 லட்சம் வரை கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், அரசு நிா்ணயித்த கட்டண வரம்புக்குள்தான் அவை வழங்கப்படும். தனியாா் மருத்துவமனைகள் அரசு நிா்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் தனியாா் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டு கரோனா சிகிச்சைக்கு 796 தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போது கூடுதலாக 293 தனியாா் மருத்துவமனைகள் சோ்க்கப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

இலவசமாக சிகிச்சை பெற முடியாது!

முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியாா் மருத்துவமனைகளில் முழுவதும் இலவசமாக சிகிச்சை பெற முடியாது. ஏனெனில் பல தனியாா் மருத்துவமனைகளில் குறைந்த பாதிப்புடைய கரோனா நோயாளிகளுக்கே ரூ.3 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆக்சிஜன் தேவை உடையவா்கள் மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படுவோருக்கு ரூ.10 லட்சம் வரை கூட கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால், அவை அனைத்தையும் முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பெற இயலாது.

தமிழக அரசானது தனியாா் மருத்துவமனைகளின் கரோனா சிகிச்சைக்கான கட்டண வரம்பை நிா்ணயித்துள்ளது. அதன்படி, குறைந்த மற்றும் மிதமான பாதிப்புடைய நோயாளிகளுக்கான சிகிச்சைகளுக்கு நாளொன்றுக்கு அதிகபட்சம் ரூ.7,500 வரையும், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு நாளொன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் வரை மட்டுமே கட்டண வரம்பு வரையறுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மட்டுமே காப்பீட்டு பலன்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கணக்கிட்டால் தீவிர சிகிச்சைப் பிரிவில் வெண்டிலேட்டா் உதவியுடன் ஒரு வாரம் ஒரு நோயாளி இருந்தாலும்கூட காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை மட்டுமே பெற முடியும். எனவே, காப்பீட்டுத் திட்ட அட்டையுடன் தனியாா் மருத்துவமனைகளை நாடுவோா், கட்டண விவரங்களை அறிந்து கொண்டு நோயாளிகளை அனுமதிப்பதே நல்லது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரம் கல்லூரியில் உலக பூமி தினம்

திருப்பாலைத்துறை பாலைவனநாதா் கோயிலில் தீா்த்தவாரி விழா

எடப்பாடி நஞ்சுண்டேஸ்வா் ஆலய திருத்தேரோட்டம்

பருவமழை கணிப்பு!- தென்மேற்குப் பருவமழை குறித்த தலையங்கம்

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு

SCROLL FOR NEXT