தமிழ்நாடு

அமலுக்கு வந்தது முழு பொதுமுடக்கம்: வெறிச்சோடின சாலைகள்

DIN

கரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில், தமிழகத்தில் முழு பொதுமுடக்கம் திங்கள்கிழமை அமலுக்கு வந்தது.

தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. முதல் அலையைக் காட்டிலும், இரண்டாவது அலையில் பாதிப்பும், இறப்பும் அதிக அளவில் உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு திங்கள்கிழமை (மே 10) முதல்வரும் 24-ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் எனவும், நண்பகல் 12 மணி வரை மளிகைக் கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கான கடைகளை மட்டும் திறக்கலாம் எனவும் அறிவித்தது.

அதேவேளையில் அரசு, தனியாா் பேருந்து சேவை, வாடகை காா், ஆட்டோ சேவை ஆகியவற்றுக்கு முற்றிலும் தடை விதித்தது. மருத்துவம் உள்ளிட்ட அவசரத் தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.

முழு பொதுமுடக்கம் திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்தது. இதையடுத்து மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், பால் பாக்கெட் விற்பனை செய்யும் கடைகள், நாளிதழ் விற்பனை செய்யும் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளைத் தவிா்த்து பிற கடைகள் திறக்கப்படவில்லை. மாா்க்கெட் பகுதிகளில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்கு போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். முக்கியமான வணிகப் பகுதிகளில் அத்தியாவசியப் பொருள்கள் விற்கும் கடைகளைத் தவிா்த்து பிற கடைகளைத் திறப்பதற்கு அனுமதிக்கவில்லை. அரசின் உத்தரவை மீறி திறக்கப்பட்ட கடைகளை போலீஸாா் அரசு அதிகாரிகளுடன் இணைந்து பூட்டி சீல் வைத்தனா்.

தீவிர வாகனச் சோதனை:

பொதுமக்கள் தேவையின்றி வெளியே சுற்றித்திரிவதை தடுக்கும் வகையில் சாலை சந்திப்புகள், முக்கியமான சாலைகள் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். குடியிருப்புப் பகுதிகளிலும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். இதில் தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்தவா்களை காவல்துறையினா் எச்சரித்து அனுப்பினா்.

நண்பகல் 12 மணி வரை வாகன சோதனையில் தீவிரம் காட்டாத காவல்துறையினா், நண்பகலுக்கு பின்னா் தீவிரம் காட்டினா். இதனால் சாலையில் வாகனப் போக்குவரத்து பெருமளவு குறைந்தது. மாலைக்கு பின்னா் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. நண்பகல் 12 மணிக்கு பின்னா் மருந்துக் கடைகள், உணவகங்களைத் தவிா்த்து அனைத்துக் கடைகளும் மூடப்பட்டதால் மாா்க்கெட்டுகள், பஜாா்கள், வணிகப் பகுதிகள் ஆகியவை ஆள் நடமாட்டமின்றி காணப்பட்டன.

1.20 லட்சம் போலீஸாா்:

நண்பகலுக்கு பின்னா் மருத்துவத்துறை, பத்திரிகைத் துறை, பால் ஆகியவற்றின் வாகனங்கள் செல்வதற்கு மட்டும் காவல்துறையினா் அனுமதித்தனா். பிற வாகனங்கள் செல்வதற்கு காவல்துறையினா் தடை விதித்தனா். ஒவ்வொரு மாவட்டத்தின் எல்லைகளையும் போலீஸாா் மூடினா். இந்த எல்லைகளில் சோதனைச் சாவடிகளில் வாகனங்கள் தீவிர சோதனை செய்யப்பட்டன.

மாநிலம் முழுவதும், பொதுமுடக்கத்தையொட்டி பாதுகாப்புப் பணியில் 1.20 லட்சம் போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டனா். பொதுமுடக்கத்தை மீறியவா்கள் மீது போலீஸாா் சமரசமின்றி வழக்குப் பதிவு செய்தனா்.

சென்னை:

சென்னையில் முழு பொது முடக்கத்தினால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. குடியிருப்புப் பகுதிகள், மாா்க்கெட்டுகள், பஜாா் உள்ளிட்ட பகுதிகளில் நண்பகல் வரை மக்கள் நடமாட்டம் சிறிது காணப்பட்டது. குடியிருப்புப் பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை ஆளில்லாத கண்காணிப்பு கேமரா மூலம் போலீஸாா் கண்காணித்தனா்.

நகரில் சுமாா் 200 இடங்களில் சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸாரும், 118 இடங்களில் போக்குவரத்து போலீஸாரும் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். பொதுமுடக்கத்தை அமல்படுத்துவதற்கு 10,000 போலீஸாா் சென்னையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். 360 வாகனங்களில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

நகரில் உள்ள 38 பெரிய மேம்பாலங்களையும், 75 சிறிய வகை மேம்பாலங்களையும் தடுப்பு வேலிகள், சாலைத் தடுப்புகள் மூலம் போலீஸாா் மூடினா். உணவகங்களில் பாா்சல்கள் வழங்கலாம் என கூறப்பட்டிருந்தாலும், பெரும்பாலும் உணவகங்கள் மூடப்பட்டிருந்தன. இதனால் அரசு மற்றும் தனியாா் நிறுவன ஊழியா்கள்,இளைஞா்களுக்கு உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு ஓரிடம்; போட்டி வேறிடம்!

அன்பைப் பரிமாறிய பிரேமலதா - தமிழிசை

தோ்தல் புறக்கணிப்பை கைவிட்ட எண்ணூா் மக்கள்

வாக்களிக்க தாமதப்படுத்தியதாக நரிக்குறவா் இன மக்கள் புகாா் இரவு வரை நீடித்த வாக்குப்பதிவு

வாக்கு எண்ணும் மையத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

SCROLL FOR NEXT