தமிழ்நாடு

பேரவைத் தலைவராக அப்பாவு, துணைத் தலைவராக கு. பிச்சாண்டி போட்டியின்றித் தேர்வு

11th May 2021 12:22 PM

ADVERTISEMENT

தமிழக சட்டப்பேரவைத் தலைவராக ராதாபுரம் தொகுதி திமுக எம்எல்ஏ அப்பாவு போட்டியின்றித் தேர்வானார். 

தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்றபின்னர் 16 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று கூடியது. இதில், பேரவைத் தலைவர் பதவிக்கு அப்பாவு மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு கு.பிச்சாண்டியும் மனுத்தாக்கல் செய்தனர். சட்டப்பேரவைச் செயலாளரிடம் இருவரும் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் இவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவைத் தலைவராக அப்பாவு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதேபோன்று அவையின் துணைத் தலைவராக கு.பிச்சாண்டியும் போட்டியின்றித் தேர்வானார். 

முன்னதாக, தற்காலிக சபாநாயகராக நேற்று பொறுப்பேற்றுக்கொண்ட கு.பிச்சாண்டி முன்னிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட எம்எல்ஏக்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர். 

ADVERTISEMENT

அப்பாவு

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் இருந்து 1996, 2001, 2006 தேர்தல்களில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றவர் அப்பாவு. பின்னர் 2011. 2016 தேர்தல்களில் தோல்வி அடைந்தார். 2016 தேர்தலில் மட்டும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது குறிப்பிடத்தக்கது. 

இதன்பின்னர் 2021 தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு நான்காவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சட்டப்பேரவை நிகழ்வுகளில் அதிக அனுபவம் கொண்ட மூத்த எம்எல்ஏ இவராவார். 

மேலும் தென் மாவட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர். குறிப்பாக பெப்சி மற்றும் கோலா நிறுவனங்கள் தாமிரவருணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதை எதிர்த்தவர். 

கு.பிச்சாண்டி

தற்காலிக சபாநாயகராக பொறுப்பேற்றுக்கொண்ட கீழ்பென்னாத்தூர் தொகுதி எம்எல்ஏ கு.பிச்சாண்டி, 1996-2001 காலத்தில் கருணாநிதி அமைச்சரவையில் தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்தவர். நான்காவது முறையாக சட்டப்பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

Tags : tn govt
ADVERTISEMENT
ADVERTISEMENT