தமிழ்நாடு

பொது முடக்கம்: தொழில் புரிவோருக்கு சலுகைகள் அறிவிப்பு

11th May 2021 08:27 PM

ADVERTISEMENT


தமிழகத்தில் பொது முடக்கத்தால் ஏற்படும் இழப்புகளை சரி செய்ய தொழில் துறையினர் மற்றும் சுய தொழில் புரிவோருக்கு தமிழக அரசு சலுகைகள் அறிவித்துள்ளது.

தொழில் மற்றும் வணிக சங்க அமைப்புகளுடன் கடந்த 9-ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையின்போது பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் 14 அறிவிப்புகள்:

 1. "சுயமுதலீட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியம் வழங்க இந்த நிதியாண்டில் முதலீட்டு மானியத்திற்கான திட்டமதிப்பீடு ரூ.280 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 60 விழுக்காடு தொகை (ரூ.168 கோடி) நிறுவனங்களுக்கு உடனடியாக விடுவிக்கப்படும். இதன் மூலம் நிலுவையில் உள்ள தகுதியான அனைத்து நிறுவனங்களுக்கும் மானியம் கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது.  
 2. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் உதவி பெறும்போது செலுத்தவேண்டிய முத்திரைத் தாள் பதிவுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து 31-3-2021 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது டிசம்பர் 2021 வரை நீட்டிக்கப்படுகிறது.
 3. மே 2021 முதல் செப்டம்பர் 2021 வரை காலாவதியாக உள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்புத் துறை, தொழிலாளர் துறை, தொழில் பாதுகாப்புத் துறை, வணிக உரிமம் உள்ளிட்ட அனைத்து சட்டபூர்வமான உரிமங்கள், டிசம்பர் 2021 வரை நீட்டிக்கப்படுகின்றன.  
 4. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் விரிவாக்கத்திற்கான முதலீட்டு மானியம் பெறுவதற்கு விற்று முதல் 25 விழுக்காடு அதிகரிக்க வேண்டுமென்ற விதிமுறையிலிருந்து ஏற்கெனவே 31-3-2021 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது 31-12-2021 வரை 9 மாத காலத்திற்கு நீட்டிக்கப்படுகிறது.
 5. கடன் உத்தரவாத நிதி ஆதாரத் திட்டம் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் பெறப்பட்ட கடனுக்கான ஐந்து விழுக்காடு பின் முனை வட்டி மானியம் நிறுவனங்களுக்கு உடனடியாக விடுவிக்கப்படும்.
 6. சிட்கோமனைகள், fast track அடிப்படையில் தொடர்ந்து ஒதுக்கீடு செய்யப்படும்.
 7. சிட்கோ நிறுவனத்திற்குச் செலுத்தப்பட வேண்டிய மனை விலை, தவணைத் தொகை மற்றும் தொழிற்கூடங்களுக்கான வாடகை போன்றவற்றைச் செலுத்துவதற்கு, மேலும் ஆறு மாதகால அவகாசம் நீட்டிப்பு செய்யப்படுகிறது.
 8. அனைத்து மாவட்டங்களிலுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில், (சிட்கோ தொழிற்பேட்டைகள், தொழிற் கூட்டுறவு சங்கங்கள் உள்பட) பணிபுரியும் 45 வயதிற்கு மேற்பட்ட சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் இடத்திலேயே கரோனா தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்து, போடப்பட்டுள்ளது. தகுதியுடைய அனைவருக்கும் சிறப்பு முகாம் மூலம் கரோனா தடுப்பூசி போட தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
 9. ஆட்டோ ரிக்ஷா மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களின் கோரிக்கை மற்றும் நலன்களைக் கருத்தில் கொண்டு ஆட்டோ ரிக்ஷா மற்றும் டாக்சி ஆகியவற்றுக்கான சாலை வரி கட்டணங்கள் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு செய்து கட்ட அவகாசம் வழங்கப்படுகிறது.
 10. சிறு குறு தொழில் நிறுவனங்கள், ஆட்டோ ரிக்ஷா, கால்டாக்சி, வாகனம் வைத்திருப்போர் வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய மாதாந்திர தவணைத் தொகையை கட்டுவதற்கும் காலநீட்டிப்பு வழங்குவது குறித்து ஒன்றிய அரசு மற்றும் மத்திய ரிசர்வ் வங்கி வலியுறுத்தப்படும்.
 11. மே 2021ல் காலாவதியாகும் ஆட்டோ ரிக்ஷா, கால்டாக்சி போன்ற வாகனங்களுக்கான காப்பீட்டுக் கட்டணத் தொகையைச் செலுத்துவதற்குக்  காலநீட்டிப்பு வழங்கக் கோரி மத்திய அரசும், IRDA அமைப்பும் வலியுறுத்தப்படும்.  
 12. மே 2021 மாதத்தில் காலாவதியாகும் தீயணைப்புத் துறை, தொழில்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை ஆகியவற்றின் மூலம் பெறப்பட வேண்டிய சட்டரீதியான மேலும் ஆறு மாத காலத்திற்கு  நீட்டிக்க  முடிவு செய்யப்படுகிறது. இது குறித்து, உரிய ஆணைகள் வெளியிட சம்பந்தப்பட்ட துறைகள் இது குறித்து மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
 13. தொழில்துறை மூலம் வழங்கப்படும் மூலதனமானியம் மூன்று தவணைகளாக வழங்குவதற்குப் பதிலாக, மாநில தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, ஒரே தவணையாக, தொழில் வளத்தை கருதி வழங்க முடிவு செய்யப்படுகிறது.
 14. பெரிய மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் செலுத்த வேண்டிய தொழில்வரியை செலுத்த மேலும் மூன்று மாதகால அவகாசம் வழங்கப்படுகிறது.”
Tags : MK stalin
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT