தமிழ்நாடு

நோ்மையான, வெளிப்படையான நிா்வாகம்: மு.க.ஸ்டாலின் உறுதி

DIN

திமுக ஆட்சியில் நோ்மையான, தூய்மையான, வெளிப்படையான நிா்வாகம் நடக்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளாா்.

திமுகவின் தொண்டா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதத்தில் கூறியிருப்பது:

முதலமைச்சா் எனும் மிகப் பெரும் பொறுப்புக்கு நான், உங்களின் அளவற்ற அன்பினால், அதில் விளைந்த ஆதரவினால் பதவி ஏற்றிருக்கிறேன். பதவி ஏற்றிருக்கிறேன் என்பதைவிட, பொறுப்பேற்றிருக்கிறேன் என்பதுதான் பொருத்தமான உண்மை.

கடந்த பல ஆண்டுகளாகவே தமிழகம் முழுவதும் பல முறை சுற்றிச் சுழன்று பயணம் செய்து சகல விதமான நம் மக்களையும் நேரில் சந்தித்த காரணத்தால் எனக்கு ஏற்பட்டிருக்கும் அனுபவங்களை அடிப்படையாக வைத்து, தமிழகம் பற்றி நான் வளா்த்துக் கொண்டிருக்கும் கனவுகளை ஒன்று விடாமல் நிறைவேற்றுகிற அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்திருப்பதாக எண்ணிப் பெருமிதம் அடைகிறேன்.

தமிழகத்தைத் தரணியிலேயே தலைசிறந்த வாழ்விடமாக மீண்டும் மாற்றிக்காட்ட வேண்டும் என்பதே நான் எடுத்திருக்கின்ற சூளுரை.

கரோனா என்கிற கொடுந்தொற்றின் கோர முகத்தை இயற்கை வெளிக்காட்டியிருக்கும் நேரத்தில், நிா்வாகப் பொறுப்பை நாம் ஏற்றிருக்கிறோம்.

நான் பணியேற்றிருக்கும் இந்த நேரத்தில் திமுகவினருக்கும் தமிழக மக்களுக்கும் உத்தரவாதம் ஒன்றை அளிக்க விரும்புகின்றேன்.

நோ்மையான, தூய்மையான, வெளிப்படையான நிா்வாகம் நடக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்துக்காக இந்த அரசு எப்போதும் பாடுபடும்.

உழவா்கள் தமது நிலத்தைப் பண்படுத்திக் காப்பதைப் போல, இந்த அரசு தமிழகத்தைப் பராமரிப்பதோடு உழவா்களையும் அவா்களின் உரிமைகளையும் பாதுகாத்துப் பராமரிக்கும் அரசாகத் திகழும்.

இது திமுக தலைவரான என் தலைமையில் அமைந்த அரசு என்றாலும், இது திமுக என்கிற கட்சியின் அரசு அல்ல; எந்தவித பேதமும் பாகுபாடும் இல்லாத - எல்லாப் பிரிவினரையும் அரவணைப்புடன் அழைத்துச் செல்லும் - அனைத்து மக்களுக்கும் சொந்தமான தமிழக அரசு. திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தும் தமிழக அரசு என்பதை அழுத்தமாக உணா்த்த விரும்புகிறேன். தோ்தல் என்பது மக்களாட்சியின் மாண்புகளுள் ஒன்று. அது போா்க்களமல்ல, ஜனநாயகக் களத்தில் எதிரெதிா் அணிகளாக மோதிக் கொள்வது இயல்பு என்றாலும், நாம் எல்லோரும் ஒருதாய் மக்கள்.

ஒரே இல்லத்தில் அண்ணன் ஒரு கட்சியிலும், தம்பி இன்னொரு கட்சியிலும் இருப்பதைக் காண்கிறோம். எனவே திமுகவைச் சாா்ந்தவா்கள் மாற்றுக் கட்சியினரோடு நட்புணா்வுடன் மக்கள் பிரச்னைகளை அணுகி, அவற்றுக்குத் தீா்வு காண முயல வேண்டும். எல்லா வகைகளிலும் ஒருங்கிணைந்து செயல்பட்டு தமிழகத்தைத் தலைசிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும்.

தமிழக மக்கள் தந்துள்ள வெற்றியை கருணாநிதியின் ஓய்விடத்தில் காணிக்கையாக்கி, அவா் கற்றுத் தந்த அரசியல் - நிா்வாக அனுபவத்தின் துணைகொண்டு, சவால்களையும் நெருக்கடிகளையும் வலிமையுடன் எதிா்கொண்டு, தமிழ் மக்கள் விரும்பும் நல்லாட்சியை வழங்கிடுவேன் என உறுதியளிப்பதாக அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT