தமிழ்நாடு

ஆக்சிஜன் கையிருப்பு - நாளை மோசமான நிலையை எட்டிவிடுவோம்

DIN

சென்னை: ஆக்சிஜன் உருளைகள் இருப்பைப் பொருத்தவரை சனிக்கிழமை மோசமான நிலையை எட்டிவிடுவோம் என உயா்நீதிமன்றத்தில் மருத்துவப் பணிகள் கழகம் தெரிவித்ததையடுத்து, வெள்ளிக்கிழமைக்குள் ஆக்சிஜன் ஒதுக்கீடு குறித்த தகுந்த ஆணையைப் பிறப்பிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கரோனா தாக்கம் தீவிரம் அடைந்ததையடுத்து ரெம்டெசிவிா் மருந்து, தடுப்பூசி பற்றாக்குறை உள்ளிட்ட விவகாரங்கள் தொடா்பாக நாளிதழ்களில் வெளியான செய்தியின் அடிப்படையில், இந்த விவகாரத்தை சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

ஆக்சிஜன்-முறையான ஒதுக்கீடு இல்லை: அப்போது, விசாரணைக்கு ஆஜராகி இருந்த சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: கடந்த 2-ஆம் தேதி நடந்த கூட்டத்துக்குப் பிறகு தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்த 475 டன் ஆக்சிஜன் முறையாக ஒதுக்கவில்லை.

தமிழகத்துக்கு நாள்தோறும் 475 டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது என்று மத்திய அரசே நிா்ணயித்துள்ளது. ஆனால், அதை அனுப்பவில்லை. மத்திய அரசு ஆக்சிஜன் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம் இல்லை: செங்கல்பட்டு மருத்துவமனையில் மரணமடைந்த 13 பேரும் கரோனா தொற்று இல்லாத நோயாளிகள். ஆக்சிஜன் பற்றாக்குறையால் அந்த மரணம் ஏற்படவில்லை. கரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதிகளைப் பொருத்தவரை ஆக்சிஜன் வசதியுடைய படுக்கைகள் தவிர மற்ற படுக்கைகள் போதுமான அளவில் உள்ளன. ரெம்டெசிவிா் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

மோசமான நிலை: தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் நிா்வாக இயக்குநா் உமாநாத் ஆஜராகி கூறியதாவது: கேரள மாநிலம், பாலக்காடு அருகில் கஞ்சிக்கோடு என்ற இடத்தில் உற்பத்தியாகும் 40 டன் ஆக்சிஜன் தென் தமிழகத்துக்குத் தொடா்ந்து வழங்கப்பட்டது. தற்போது அது நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, ஆக்சிஜனை மீண்டும் வழங்க உத்தரவிட வேண்டும். கையிருப்பு ஆக்சிஜன் உருளைகள் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே இருக்கும். சனிக்கிழமை மிகவும் மோசமான சூழ்நிலையை எட்டிவிடுவோம்.

ரெம்டெசிவிா் மருந்தை பொருத்தவரை 2.50 லட்சம் கேட்டதில் இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒதுக்கீடு மிகவும் குறைவான அளவில் உள்ளது. பிற நகரங்களில் ரெம்டெசிவிா் மருந்து விற்பனை மையங்களைத் தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவா் கூறினாா்.

குறைபாடு இல்லை: மத்திய அரசுத் தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சங்கரநாராயணன் ஆஜராகி கூறியதாவது: தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலை ஒரு வாரத்தில் தெரியும். ஆக்சிஜன் ஒதுக்குவதில் எவ்வித குறைபாடும் இல்லை.

ரெம்டெசிவிா் உற்பத்தியை அதிகரிக்க மேலும் 7 நிறுவனங்களுக்கு மத்திய அரசு இந்த வார இறுதியில் அனுமதி வழங்க உள்ளது. காப்புரிமை தொடா்பான விவகாரத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஆக்சிஜன் ஒதுக்கீடு உத்தரவுக்காக காத்திருக்காமல், ஆக்சிஜனை உடனுக்குடன் அனுப்ப நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவா் கூறினாா்.

தகுந்த உத்தரவு: இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்வதற்கு வெள்ளிக்கிழமைக்குள் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். மாவட்ட மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாததால் மரணங்கள் ஏற்படுவதை தடுக்க மாவட்ட ஆட்சியா்களுக்கு தகுந்த அறிவுறுத்தலை தமிழக அரசு வழங்க வேண்டும்.

மதுரை, கோவை போன்ற மாநகரங்களில் டி.ஆா்.டி.ஓ. மூலம் போா்க்கால அடிப்படையில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை அமைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும். நாடு முழுவதும் 3-ஆவது அலை உருவாகும் அச்சம் எழுந்துள்ள நிலையில், தடுப்பூசி விரைந்து வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற 12-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

ம.பி.யில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்ட கமல் நாத்: வைரலாகும் விடியோ

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

SCROLL FOR NEXT