தமிழ்நாடு

பிள்ளைகள் ஒருமுறையாவது பள்ளியை பார்ப்பார்களா? பெற்றோர் கவலை

DIN


மும்பை: பள்ளிச் சென்று கொண்டிருந்த பிள்ளைகள் தற்போது ஆன்லைன் மூலம் கல்வி கற்று வந்தாலும் அவர்களது கல்வியின் தரம் போதுமானதாக இருக்காதே என்று ஒரு பக்கம் பெற்றோர் கவலை அடைந்துள்ளனர்.

அதே வேளையில், இதுவரை பள்ளியே செல்லாத கடந்த ஆண்டோ அல்லது இந்த ஆண்டோ மழலையர் பள்ளியில் சேர்ந்திருக்க வேண்டிய குழந்தைகளின் பெற்றோரின் கவலை சொல்லில் மாளாது.

பள்ளியில் சொல்லிக் கொடுக்கும் அழகழகான மொழிப் பாடல்களை வீட்டில் வந்து கொஞ்சம் மொழியில் பேசி கைதட்டல் வாங்குவதும்,  அ, ஆ, இ, ஈ மற்றும் ஏ, பி, சி, டி என்றும் 1, 2, 3, 4 என எழுதி ஒவ்வொரு எழுத்தையும் மிக அழகாக அறிமுகம் செய்வது இந்த மழலையர் பள்ளியில் தானே.

குள்ள குள்ள வாத்து என்று இடுப்பில் கையை வைத்துக் கொண்டு தலையையும், இடுப்பையும் அசைத்தபடி நாம் பாடுவது சரியா.. மிஸ் சொல்லிக் கொடுத்தபடிதான் பாடுகிறோமா என்ற ஒரு வித மிரட்சியுடன் கண்களை உருட்டிக் கொண்டே ஆனால் பயத்தை வெளிக்காட்டாமல்  ஆசிரியர் சிரித்துக் கொண்டே எப்படி பாடலை சொல்லிக் கொடுத்தாரோ அதே முகப்பாவத்துடன் வகுப்பறையில் பள்ளியின் கரும்பலகை முன்பு நின்று பாடுவதும் இனி நம் பிள்ளைகளுக்கு வாய்க்குமா? எப்போது வாய்க்கும்? என்ற மிகப் பெரும் கேள்விகளுடன் இருக்கிறார்கள் பெற்றோர்கள்.

கடந்த ஆண்டு பள்ளியில் சேர்க்க வேண்டிய பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து, புத்தகம் எல்லாம் வாங்கியும் பிள்ளைகளுக்கு வீட்டிலேயே தாயோ தந்தையோ சொல்லிக் கொடுக்கும் அ, ஆ மட்டுமே இதுவரை அவர்களுக்குத் தெரிந்த கல்வி.

கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதுவரை பள்ளிச் சென்று படித்துக் கொண்டிருந்த மாணவ, மாணவிகள் படித்தார்களோ இல்லையோ அடுத்தக்கட்ட வகுப்புகளுக்கு தேர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். வசதி படைத்தவர்கள் ஆன்லைன் அல்லது வீட்டுக்கு வந்து கற்பிக்கும் சிறப்பு ஏற்பாடுகளை செய்து விட்டனர்.

ஆனால், ஏழை, எளியக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள், வீட்டில் தாய், தந்தையால் படிக்க வைக்க முடியாமல் பள்ளிக்குச் செல்லவும் வாய்ப்பில்லாமல், கல்வியின் ஆரம்பப் புள்ளியைக் கூட எட்ட முடியாமல் தவித்து நிற்கின்றன. இதுவரை இந்த ஏற்றத்தாழ்வுகளை தவிடு பொடியாக்கி வந்த கல்வியும் இவர்களுக்கு இனி எட்டாக்கனியாகிவிட்டது.


கரோனா பெருந்தொற்றால் குறைந்தபட்சம் 6 மாதத்துக்கு பள்ளிகள் திறப்பது குறித்து நினைத்துப் பார்க்கவே முடியாத நிலையில், குழந்தைகளின் பாதுகாப்புதான் இதில் மிகவும் முக்கியமாக உள்ளது என்பதையும் அனைவரும் அறிந்தே உள்ளனர்.

அதோடு, பக்கத்தில் இருக்கும் மழலையர் பள்ளிகளுக்கு அனுப்பத் திட்டமிட்டிருந்த பெற்றோர், நம் பிள்ளைகள் ஒரு நாளாவது பள்ளிக்குச் செல்வார்களா? அவர்களுக்கும் அந்த பள்ளி அனுபவம் என்பது கிட்டுமா? என்ற ஏக்கத்தில் உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலம் இஸ்கானில் ஸ்ரீராம நவமி விழா

மேட்டூா் அணை நிலவரம்

வாக்குப் பதிவையொட்டி சேலம் தொகுதியில் பலத்த பாதுகாப்பு

சேலம் மாவட்டத்தில் தயாா் நிலையில் 3,260 வாக்குச் சாவடிகள்

வாக்குச் சாவடி மையங்களுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT