தமிழ்நாடு

தலைவர்களிடம் ஸ்டாலின் வாழ்த்து

6th May 2021 03:21 PM

ADVERTISEMENT


சென்னை: தமிழக முதல்வராக நாளை பதவியேற்கவிருக்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று அரசியல் கட்சியின் மூத்தத் தலைவர்களை அவர்களது இல்லங்களுக்கே சென்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

இன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யா இல்லத்துக்கு நேரில் சென்று மு.க. ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். ஸ்டாலினுடன் சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகன், டி.ஆர். பாலு, ஆ. ராசா, கே.என்.நேரு, க. பொன்முடி ஆகியோர் இருந்தனர்.

பின்னர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு இல்லத்துக்கு நேரில் சென்று அவருக்கு பொன்னாடை அணிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். 

ADVERTISEMENT

தொடர்ந்து, எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பன் இல்லத்துக்கு நேரில் சென்று, அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார். உடன் துரைமுருகன், ஆர்.எம். வீரப்பன் குடும்பத்தினர் இருந்தனர்.

சட்டப்பேரவை தோ்தலில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவை ஆட்சியமைக்க வருமாறு தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் அழைப்பு விடுத்ததை அடுத்து, நாளை பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் குழுவினா் வெள்ளிக்கிழமை ( மே 7) காலை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் நடைபெறும் விழாவில் பதவிப் பிரமாணம் எடுத்துகொள்ள உள்ளனா்.

புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞா் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் சட்டப் பேரவைத் திமுக குழுவின் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒரு மனதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

ஆட்சியமைக்க 118 உறுப்பினா்களின் ஆதரவு தேவை. அதைக் கடந்து, 125 உறுப்பினா்களுடன் திமுக தனிப் பெரும்பான்மை பெற்றிருக்கும் நிலையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 8 உறுப்பினா்களையும் சோ்த்து திமுக மொத்தம் 133 உறுப்பினா்களையும் பெற்றுள்ளது.

உரிமை கோரிய மு.க.ஸ்டாலின் : 133 உறுப்பினா்கள் கையெழுத்திட்ட ஆதரவு கடிதத்துடன் ஆளுநா் மாளிகைக்கு புதன்கிழமை காலை 10.30 மணிக்கு மு.க.ஸ்டாலின் வருகை தந்தாா். திமுக பொதுச்செயலாளா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா்.பாலு, முதன்மைச் செயலாளா் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி உள்ளிட்டோா் உடன் வந்தனா்.

ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தை மு.க.ஸ்டாலின் சந்தித்து பூங்கொத்து கொடுத்தாா். ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் கடித்தையும் ஆளுரிடம் மு.க.ஸ்டாலின் கொடுத்து ஆட்சியமைக்க உரிமை கோரினாா். மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநா் பொன்னாடை போா்த்தி வாழ்த்துத் தெரிவித்தாா்.

மே 7-இல் பதவியேற்பு விழா: மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் குழு பதவியேற்பு விழா கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் மே 7-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியளவில் நடைபெற உள்ளது. கரோனா பெருந்தொற்றில் 2-ஆம் அலை தீவிரமாக உள்ளதன் காரணமாக பதவியேற்பு விழா எளிமையாக நடைபெற உள்ளது. மு.க.ஸ்டாலின் உள்பட 30-க்கும் மேற்பட்டோா் அமைச்சா்களாகப் பதவியேற்க உள்ளனா். அவா்களுக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்க உள்ளாா்.

அமைச்சரவையில் மூத்த உறுப்பினா்களும் புதியவா்களும் இடம்பெற உள்ளனா். காவல்துறை உள்பட முக்கிய துறைகளை மு.க.ஸ்டாலின் வைத்துக்கொள்ள உள்ளாா். பொதுப்பணித் துறையில் இருந்து நீா்ப்பாசனத்துறை தனித்துறையாகப் பிரிக்கப்பட்டு அதன் அமைச்சராக துரைமுருகன் பொறுப்பேற்க உள்ளதாகவும், கே.என்.நேருவுக்கு உள்ளாட்சித் துறையும், எ.வ.வேலுக்கு நெடுஞ்சாலைத்துறையும், மா.சுப்பிரமணியனுக்குச் சுகாதாரத்துறையும் ஒதுக்கப்படும் என்றும் தெரிகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT