தமிழ்நாடு

திருவள்ளூர் பஜார் பகுதியில் கரோனா சிறப்பு அதிகாரி திடீர் ஆய்வு

6th May 2021 03:17 PM

ADVERTISEMENT

 

திருவள்ளூர் பஜார் மற்றும் காய்கறி சந்தை பகுதியில் கரோனா சிறப்பு அதிகாரி ஜோதி மற்றும் நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, 12 மணிக்கு மேல் திறந்த கடைகளுக்கு அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்த நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அவ்வகையில் பால், மருந்துக்கடைகள் வார நாள்கள் அனைத்திலும் தடையின்றி செயல்படலாம். அதேபோல் மளிகை காய்கறி கடைகள் வாரத்தில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை பகல் 12 மணி வரை இயங்கலாம். அதேபோல், உணவகங்களில் பார்சல் மட்டும் அனுமதி அளித்துள்ளது. இதன் அடிப்படையில் திருவள்ளூர் காய்கறி சந்தைகள், பல்பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை முதல் செயல்பட்டு வந்த நிலையில் பகல் 12 மணிக்கு ஒவ்வொரு கடைகளாக அடைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த நிலையில் விதிமுறைப்படி பகல் 12 மணிக்கு காய்கறி சந்தை மற்றும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதா என்பதை கரோனா திட்ட அதிகாரி ஜோதி தலைமையில் நகராட்சி வருவாய் அதிகாரி, துணை சுகாதார அதிகாரி உள்ளிட்டோர் வியாழக்கிழமை நண்பகலில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, விதிமுறை மீறி திறந்திருந்த பழக்கடை மற்றும் கடைகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர். 

மேலும், நாள்தோறும் இதே நடைமுறையை பின்பற்றவும் நகராட்சி சார்பில் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT