தமிழ்நாடு

புதுவையில் மே 9-இல் என்.ரங்கசாமி முதல்வராக பதவி ஏற்பு?

5th May 2021 05:11 AM

ADVERTISEMENT


புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி) ஆட்சி அமைவது உறுதியாகியுள்ள நிலையில், ஆளுநர் மாளிகையில் வருகிற 9-ஆம் தேதி எளிமையான முறையில் என்.ரங்கசாமி முதல்வராக பதவி ஏற்பார் எனத் தெரிகிறது.

புதுவை மாநிலத்தில் 15-ஆவது சட்டப் பேரவைக்கான தேர்தல் கடந்த மாதம் 6-ஆம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த 2-ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், பாஜக 6 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், திமுக 6  தொகுதிகளிலும், சுயேச்சைகள் 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதில், பெரும்பான்மைக்குத் தேவையான 16 இடங்களில் வெற்றிபெற்ற என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளது.

என்.ஆர். காங்கிரஸ் - பாஜக ஆகிய இரு கட்சிகளையும் சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை துணை நிலை ஆளுநர் (பொ) தமிழிசையிடம் திங்கள்கிழமை மாலை வழங்கி, மாநிலத்தில் ஆட்சி அமைக்க என்.ரங்கசாமி உரிமை கோரினார். இதற்கு, ஆளுநர் ஒப்புதல் வழங்கியதையடுத்து, பதவி ஏற்கும் நாள் குறித்து விரைவில் அறிவிப்பதாக என்.ரங்கசாமி தெரிவித்தார்.

பதவி ஏற்பு விழா ஏற்பாடு தீவிரம்: இதனிடையே, புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் என்.ரங்கசாமி தலைமையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா வருகிற ஞாயிற்றுக்கிழமை (மே 9) பிற்பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ளதாகத் தெரிகிறது. கரோனா பொது முடக்கம் காரணமாக, எளிமையான முறையில் நடைபெறும் இந்த விழாவில், முதல்வராக என்.ரங்கசாமி பதவி ஏற்கிறார். ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். இதர அமைச்சர்களும் இந்த விழாவிலேயே பதவி ஏற்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதற்கான பணிகள் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து, அடுத்த வாரத்தில் எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பும், சட்டப் பேரவைத் தலைவர் தேர்வும் நடைபெறும் எனத் தெரிகிறது. இதற்காக, சட்டப் பேரவை வளாகத்தை புதுப்பிக்கும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT