தமிழ்நாடு

நாய்க்கு நண்பரான ஆடு: இரண்டையும் இரட்டைக் குழந்தைகளைப் போல வளர்த்து வரும் பெண்

4th May 2021 02:53 PM

ADVERTISEMENT

 

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் கூலித்தொழிலாளியான பெண் ஒருவர், தனது இரட்டைக் குழந்தைகளைப்போல கருதி, ஒரு நாய் மற்றும் ஒரு ஆட்டுக்குட்டியை வளர்த்து வருகிறார். அபூர்வ நண்பர்களாகி, எங்கும் இணை பிரியாமல் இணைந்து செல்லும் இந்த நாயையும் ஆட்டையும் காண்போர் வியந்து பாராட்டி செல்கின்றனர்.

குக்கிராமங்களில் குடிசை வீடுகளில் வாழும் ஏழை எளியோர் முதல் நகரப்புறங்களில் மாட மாளிகைகளில் வாழும் செல்வந்த சீமான்கள் வரை, அனைத்து தரப்பினரும், நாய், பூனை, ஆடு, காளை, குதிரை உள்ளிட்ட வீட்டு விலங்குகளை பரிவுகாட்டி வளர்த்து வருகின்றனர். வளர்ப்போரிடம் செல்லமாக கொஞ்சி விளையாடும் வீட்டு விலங்குகள், மன அழுத்தத்தைக் குறைத்து மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன. ஒரு சில தருணங்களில் வீட்டு விலங்குகள் மனிதர்களை விஞ்சும் வகையில், வளர்ப்போர்களுக்கு விசுவாசத்தைக் காட்டி வியக்க வைத்து விடுகின்றன. 

எதிரும் புதிருமான விலங்குகள் கூட ஒரே இடத்தில் வளர்க்கப்படும் போது நெருங்கிய தோழமையோடு பழகி, இணை பிரியாத அபூர்வ நண்பர்களாகிக் காண்போரை வியப்பில் ஆழ்த்தி விடுகின்றன. 

ADVERTISEMENT

வாழப்பாடி பேரூராட்சி புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கனகரத்தினம் மனைவி கலைச்செல்வி 39. இத்தம்பதியருக்கு இரு மகன்கள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கலைச்செல்வி, கரோனா பொது முடக்கத்தில் வீட்டில் முடங்கியிருந்த தருணத்தில் ஒரு ஆண் நாய்க்குட்டி மற்றும் ஒரு பெட்டை வெள்ளாட்டு குட்டியையும் வாங்கினார். 

தனது இரட்டைக் குழந்தைகளைப்போலக் கருதி, நாய்க்குட்டிக்கு ராக்கி என பெயரிட்டும். ஆட்டுக்குட்டிக்கு லட்சுமி என்றும் பெயர் சூட்டி, இரண்டையும் ஒரே இடத்தில் வைத்துக் கொண்டு புட்டிப்பால் கொடுத்து வளர்த்துள்ளார். இதனால், இவை இரண்டும் அபூர்வ நண்பர்களாகின. தற்போது பெரிதாக வளர்ந்து விட்ட நிலையிலும் இரண்டும் இணைபிரியாமல் எங்கும் ஒன்றாகவே சென்று விளையாடி வருகின்றன. 

கயிற்றின் ஒருமுனையில் நாயையும், மறு முனையில் ஆட்டுக்குட்டியையும் கலைச்செல்வி கட்டி விடுகிறார். கலைச்செல்வி செல்லும் இடங்களுக்கு எல்லாம், கட்டை வண்டியில் பூட்டப்பட்ட மாடுகளைப் போல இவர் வளர்த்து வரும் நாயும், ஆடும் இணைந்து இவருடன் சென்று வருகின்றன. இந்த நாயையும் ஆட்டையும் காண்போர் வியந்து பாராட்டி செல்கின்றனர்.

இதுகுறித்து கலைச்செல்வி நமது நிருபரிடம் கூறியதாவது:

கடந்தாண்டு கரோனா பெருந்தொற்று பொது முடக்க தருணத்தில் வீட்டில் முடங்கியிருந்த தருணத்தில் ஒரு நாய்க்குட்டி மற்றும் ஒரு ஆட்டுக்குட்டியை வாங்கி வந்து வளர்க்க ஆரம்பித்தேன். சிறிய குட்டிகளாக இருந்ததால் வீட்டிற்குள் ஒரே இடத்தில் இரண்டையும் வைத்து வளர்த்து வந்தேன். இதனால் இரண்டும் நண்பர்களாகிவிட்டன. குழந்தைகளைப்போல என்னிடம் பழகிக் கொண்டன. எனது மடியில் வந்து அமர்ந்து கொள்வதோடு எனது படுக்கையிலேயே உறங்குகின்றன. 

இரண்டையும் ஒரே கயிற்றில் கட்டி விட்டால் நான் செல்லும் இடமெங்கும் என்னுடனே வந்து விடுகின்றன. இந்த ஆடும் நாய்க்குட்டியும் என்னிடம் மட்டுமின்றி எனது கணவர் மற்றும் மகன்களிடம் மிகுந்த பாசத்தோடு பழகி வருவதால், எவ்வளவு வேலைப்பளு இருப்பினும் மன அழுத்தமின்றி மகிழ்ச்சி ஏற்படுகிறது என்றார்.

Tags : சேலம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT