தமிழ்நாடு

25 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீரங்கத்தில் மீண்டும் திமுக!

4th May 2021 03:59 AM | நமது நிருபர்

ADVERTISEMENT


திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவை தொகுதிகளிலேயே அதிமுகவின் கோட்டையாகவும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் விஐபி தொகுதியாகவும் மாறிய ஸ்ரீரங்கத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தடம் பதித்துள்ளது.
கடந்த 1996ஆம் ஆண்டு திமுகவைச் சேர்ந்த டி.பி. மாயவன், 73,371 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளர் மு. பரஞ்ஜோதியை தோல்வியுறச் செய்து ஸ்ரீரங்கம் தொகுதியை கைப்பற்றினார். அதற்கு பிறகு, 3 முறை அதிமுக வெற்றி பெற்றது.  2001-இல் கே.கே. பாலசுப்பிரமணியன், 2006இல் மு. பரஞ்ஜோதி, 2011-இல் ஜெயலலிதா, 2016-இல் எஸ். வளர்மதி ஆகியோர் தொடர்ந்து வெற்றி பெற்றனர். முன்னதாக 2015இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த எஸ். வளர்மதி வெற்றி பெற்றார். இடைத்தேர்தலில் இங்கு நிறுத்தப்பட்டிருந்த திமுக வேட்பாளர் ஆனந்தை பொதுவேட்பாளராக ஏற்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதியே கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு அதிமுகவின் எஃகு கோட்டையாக இருந்த தொகுதி.
முதல்வர் அந்தஸ்து தொகுதி: ஜெயலலிதா போட்டியிட்டு வென்றதால் முதல்வர் அந்தஸ்து கிடைத்து தொகுதிக்கு ஏராளமான திட்டங்கள் வந்து சேர்ந்தன.
தேர்தல் பிரசாரத்துக்கு முதல்முறையாக வந்த ஜெயலலிதா பேசுகையில்,  ஸ்ரீரங்கம் எனது பூர்வீக ஊராகும். என்னுடைய குடும்ப முன்னோர்கள் இங்குதான் பிறந்தார்கள், வளர்ந்தார்கள், வாழ்ந்தார்கள். எனவே, ஸ்ரீரங்கத்துக்கு நான் வந்து செல்வது, எனது குடும்ப வீட்டுக்கு வந்து செல்வது போன்ற உணர்வைத் தருகிறது எனக் குறிப்பிட்டார். இதையடுத்து தங்களது சொந்த மண்ணைச் சேர்ந்தவரை அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்தனர் தொகுதி மக்கள். தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆனந்தைவிட 41,488 வாக்குகள் பெற்று (மொத்தம் 1,05,328 வாக்குகள்) வெற்றி பெற்றார். இதனையடுத்து மூன்றாவது முறையாக முதல்வர் பதவியேற்கும் வாய்ப்பை ஸ்ரீரங்கம் தொகுதி வழங்கியது.
இதற்கு நன்றிக்கடனாக மகளிர் தோட்டக்கலைக்கல்லூரி, சட்டப் பல்கலைக் கழகம், ஐஐஐடி, அரசு பொறியியல் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, யாத்ரி நிவாஸ், திருவானைக்கா ரயில்வே மேம்பாலம், கம்பரசம்பேட்டை தடுப்பணை, துணை மின்நிலையங்கள், கள்ளிக்குடி சந்தை, குளிர்சாதன வசதியுடன் கூடிய வாழை வணிக வளாகம், பள்ளிக் கட்டடங்கள், கிராமங்கள் முழுவதும் தார்ச்சாலைகள், சிமென்ட் சாலைகள், அரங்கநாதர் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம், பசுமை வீடுகள், குடிநீர்த் திட்டங்கள் என அடுக்கடுக்கான திட்டங்களை கொண்டு வந்து தொகுதி மக்களை திக்குமுக்காடச் செய்தார். இதற்கு பிரதிபலனாக இரட்டை இலை சின்னத்தில் எவர் நின்றாலும் வெற்றியைத் தேடி தந்தனர் தொகுதி மக்கள்.
இத்தகைய சிறப்பு மிக்க தொகுதியை தற்போது அதிமுக இழந்து நிற்கிறது. இதற்கு இரு அமைச்சர்களே பிரதான காரணம் என்கின்றனர் அதிமுகவினர். தொகுதியின் அமைச்சரான பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதியும், தொகுதிக்கும், தொகுதி மக்களுக்கும் குறிப்பிடும்படியாக எதுவும் செய்யவில்லை. குறைந்தபட்சம் தொகுதி மக்களை தன்வசப்படுத்தவில்லை.  சுற்றுலாத்துறை அமைச்சரான வெல்லமண்டி என். நடராஜனும், மாவட்ட செயலாளர் பதவியை வகித்து மாவட்டத்தில் கட்சியைப் பலப்படுத்தவில்லை.
9 தொகுதிகளையும் கைப்பற்றியது திமுக: இதன்கராணமாக உள்ளாட்சித் தேர்தலிலேயே திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சித் தலைவர் பதவிகளையும் திமுக கைப்பற்றியது. தற்போது, மீண்டும் மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. குறிப்பாக, ஸ்ரீரங்கத்தை திமுக தட்டிப்பறித்துள்ளது என்றே கூற வேண்டும் என்கின்றனர் அதிமுகவினர். மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் ஆரம்பம் முதலே திமுக முன்னிலை பெற்றாலும், ஸ்ரீரங்கத்தில் மட்டும் அதிமுக வேட்பாளர் கு.ப. கிருஷ்ணன் பல சுற்றுகளில் முன்னிலையில் இருந்தார். ஆனால், இறுதியில் திமுக வெற்றி பெற்றது.
மாவட்டத்தின் 9 தொகுதிகளில் திருச்சி மேற்கில் கே.என். நேரு, திருச்சி கிழக்கில் இனிகோ இருதயராஜ், திருவெறும்பூரில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஸ்ரீரங்கத்தில் எம். பழனியாண்டி, மண்ணச்சநல்லூரில் எஸ். கதிரவன், மணப்பாறையில் அப்துல் சமது (மமக), லால்குடி அ. சௌந்தரபாண்டியன், துறையூர் ஸ்டாலின்குமார், முசிறி காடுவெட்டி தியாகராஜன் என திமுக வேட்பாளர்களே வெற்றி வாகை சூடியுள்ளனர்.

திருப்புமுனை திருச்சி பொதுக்கூட்டம்!

பேரவைத் தேர்தலுக்கு முன்பாக திருச்சியில் திமுகவின் 11ஆவது மாநில மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே 700 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. தேர்தல் ஆணைய கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து மாநாடு ரத்து செய்யப்பட்டு, பொதுக்கூட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, மார்ச் 7இல் விடியலுக்கான முழக்கம் என்ற பெயரில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில்தான் திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய 7 அறிவிப்புகள் துறை வாரியாக வெளியிடப்பட்டது. சாதனை புத்தகத்தில் இடம்பெறும் அளவுக்கு அதிக பரப்பளவில் நடைபெற்ற இந்த பொதுக் கூட்டம், திமுகவின் வெற்றிக்கு கை கொடுத்தது என்பதை மறுப்பதற்கில்லை. திருச்சியில் நடைபெற்ற இக் கூட்டம்  திமுகவுக்கு திருப்புமுனையாகவும் அமைந்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT