தமிழ்நாடு

அம்மா உணவகம் சூறை: கட்சியினர் மீது திமுக நடவடிக்கை (விடியோ)

4th May 2021 03:43 PM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னை ஜேஜே நகர் பகுதியில் அமைந்திருந்த அம்மா உணவகத்தில் இருந்த பேனர்கள் மற்றும் பெயர்ப் பலகைகளை திமுகவினர் அகற்றி சாலையில் வீசிய சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

மதுரவாயல் அருகே ஜெ.ஜெ. நகர் பகுதியின் முக்கியச் சாலையில் அமைந்திருக்கும் அம்மா உணவகத்துக்கு இன்று காலை வந்த இரண்டு பேர், ஏன் இன்னமும் அம்மா உணவகம் என்று பெயர்ப் பலகை இருக்கிறது என்று சொல்லி, அவற்றை அப்புறப்படுத்தி, கிழித்தெறிந்தனர். தரையில் போட்டு மிதித்தனர். இதனை அங்கிருந்த சமையல் பணியாளர்கள் செய்வதறியாது பார்த்துக் கொண்டிருந்தனர்.

இது தொடர்பான விடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு, திமுகவுக்கு எதிராக விமரிசனங்களும் எழுந்தன. முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமாரும், தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த விடியோவைப் பகிர்ந்து தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார்.

ADVERTISEMENT

"ஏழை எளிய மக்களின் பசியை போக்கிய அம்மா உணவகம் இன்று சில சமூக விரோதிகளால் சேதப் படுத்தப்பட்டது மிகுந்த கண்டனத்திற்குரியது.. மழை வெள்ள காலம், கொரோனா கால ஊரடங்கின் போதும் அனைத்து மக்களுக்கும் உணவளித்த அம்மா உணவகத்தை சூரையாடிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.." என்று பதிவிட்டிருந்தார்.

இந்தக் காட்சி வைரலானதைத் தொடர்ந்து, உடனடியாக களத்தில் இறங்கினர் திமுகவினர். அம்மா உணவகத்துக்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்று கண்டுபிடித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அவர்களை அதே அம்மா உணவகத்துக்கு அழைத்து வந்த கட்சியினர், அவர்கள் அகற்றிய பலகைகளை அவர்களையே ஒட்டவைத்தனர்.

இது குறித்து மா. சுப்ரமணியன் தனது சுட்டுரையில் விடியோவுடன் விளக்கம் அளித்துள்ளார். அதில், "மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கட்சி தோழர்கள் மீது  சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும், அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் வணக்கத்திற்குரிய கழகத்தலைவர் அவர்கள் உடனடியாக உத்தரவிட்டார்..." என்று பதிவிட்டு, அது தொடர்பான விடியோவையும் பதிவிட்டுள்ளார்.
 

Tags : amma unavagam dmk video viral
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT