தமிழ்நாடு

சங்கரன்கோவில்: 30 ஆண்டுகளுக்குப் பின் அதிமுக கோட்டையைக் கைப்பற்றியது திமுக!

3rd May 2021 01:19 PM | எம். முத்துமாரி

ADVERTISEMENT

சங்கரன்கோவில் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 30 ஆண்டுகளுக்குப் பின் அதிமுக கோட்டையை திமுக கைப்பற்றியுள்ளது. 

அதிமுகவின் கோட்டை என்று கூறப்படும் சங்கரன்கோவில் தொகுதியில் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ஈ.ராஜா, அதிமுக வேட்பாளர் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமியை தோற்கடித்து வரலாறு சாதனை படைத்துள்ளார். 

கடைசியாக 1989 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட எஸ். தங்கவேலு வெற்றி பெற்றிருந்தார். இவர் இரண்டு ஆண்டுகள் மட்டுமே எம்எல்ஏ வாக இருந்தார். 1991ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. எஸ். தங்கவேலுர் 2010-16 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

அதன்பின்னர் 1991 தேர்தலில் வி.கோபாலகிருஷ்ணன் அதிமுக சார்பில் போட்டியிட்டு தொகுதியைக் கைப்பற்றினார்.

ADVERTISEMENT

இதையடுத்து 1996, 2001, 2006, 2011 என அடுத்தடுத்த நான்கு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சி. கருப்பசாமி வெற்றி பெற்று தொகுதியை அதிமுகவின் கோட்டையாக மாற்றினார். சி. கருப்பசாமி, அதிமுக ஆட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கால்நடைத்துறை, இளைஞர் மற்றும் விளையாட்டு நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 

இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு சி. கருப்பசாமி மறைந்த நிலையில் 2012இல் சங்கரன்கோவில் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முத்துச்செல்வி வெற்றி பெற்றார். 

தமிழகத்தில் சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்துக்கும் இடையேயான வாக்குவாதத்தில், 'பால் விலையை உயர்த்திய பிறகும், பேருந்து கட்டணத்தை உயர்த்திய பிறகும் சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக, தேமுதிக துணையின்றி தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது. 

தொடர்ந்து 2016 சட்டப்பேரவைத் தேர்தலிலும் மீண்டும் முத்துச்செல்விக்கே வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் அதிமுக சார்பில் வி.எம்.ராஜலட்சுமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் ஆதிதிராவிடர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். 

தொடர்ச்சியாக 2021 தேர்தலில் அதிமுக சார்பில் வி.எம்.ராஜலட்சுமிக்கே வாய்ப்பளிக்கப்பட்டது. திமுக சார்பில் தொகுதிக்கு மக்களிடையே அவ்வளவு அறிமுகம் இல்லாத வழக்கறிஞர் ஈ.ராஜா களமிறக்கப்பட்டார். எனினும் தற்போது 1989 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 30 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுகவின் கோட்டையை திமுக கைப்பற்றி உள்ளது.

1996 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற 4 தொகுதிகளில் சங்கரன்கோவில் தொகுதியும் ஒன்று என்பதும் 2012 இடைத் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

1952 - 2021 வரையிலான தேர்தல்களில்(2012 இடைத்தேர்தலையும் சேர்த்து)  அதிமுக 10 முறையும், திமுக 5 முறையும், காங்கிரஸ் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. 

தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு:

சங்கரன்கோவில் தொகுதியில் குடிநீர் பிரச்னை, போக்குவரத்து நெரிசல், பல தெருக்களில் சாலை வசதியின்மை, அரசுப் பள்ளிகள், அரசு மருத்துவமனை தரம் உயர்த்துதல், நெசவுத் தொழில்-நூல் விலை உயர்வு, கூலியை உயர்த்துதல்  உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளன. 

கடந்த 5 ஆண்டுகளில் சங்கரன்கோவில் தொகுதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி எதுவும் இல்லை என்ற மனக்குறையோடு மக்கள் உள்ளனர். திமுக ஆட்சியும் திமுக வெற்றி வேட்பாளர் ஈ.ராஜாவும் தங்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே இத்தொகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. 

2021 தேர்தல் நிலவரம்

சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் இ.ராஜா, அதிமுக சாா்பில் அமைச்சா் வி.எம்.ராஜலட்சுமி உள்பட மொத்தம் 15 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

தபால் வாக்குகள் உள்பட மொத்தம் 1,81,123 வாக்குகள் பதிவாகின. அவை தென்காசி கொடிக்குறிச்சியில் உள்ள தனியாா் கல்லூரியில் 26 சுற்றுகளாக எண்ணப்பட்டன.

திமுக வேட்பாளா் இ.ராஜா 71,184 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான வி.எம்.ராஜலட்சுமி 65,830 வாக்குகளுடன் 2-ஆவது இடத்தைப் பிடித்தாா். அமமுக வேட்பாளா் ஆா்.அண்ணாதுரை 22,676 வாக்குகளுடன் 3-ஆவது இடத்தைப் பிடித்தாா்.

திமுக சாா்பில் போட்டியிட்ட இ.ராஜா அதிமுக வேட்பாளரைவிட 5,354 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றாா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

1.இ.ராஜா (திமுக)-71,184

2.வி.எம்.ராஜலட்சுமி (அதிமுக)-65,830

3.ஆா்.அண்ணாதுரை (அமமுக)-22,676

4. பி.மகேந்திரகுமாரி (நாம் தமிழா் கட்சி)- 13,823

5. வி.சுப்பிரமணியம் (புதிய தமிழகம்)-1,941

6. கே.பிரபு (மக்கள் நீதி மய்யம்)-2,331

7. நோட்டா-1,955

Tags : election result
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT