தமிழ்நாடு

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதையும் கைப்பற்றியது திமுக கூட்டணி!

3rd May 2021 06:13 PM | சி.வ.சு. ஜெகஜோதி

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 3இல் திமுக வேட்பாளர்களும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளையுமே திமுக கூட்டணியே கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர், உத்தரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் என 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவை நான்கிலும் 33 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் உட்பட சுயேச்சைகளையும் சேர்த்து மொத்தம் 75 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

1,872 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு அதில் மொத்த வாக்காளர்கள் 13,13,714 பேரில் 9,34,164 பேர் வாக்களித்திருந்தனர். 71.11 வாக்குப்பதிவு சதவிகிதமாகவும் இருந்தது. வாக்கு எண்ணிக்கை காஞ்சிபுரத்தை அடுத்த பொன்னேரிக்கரையில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் 4 தொகுதிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT

ஆலந்தூர் தொகுதியில் திமுக வெற்றி

இத்தொகுதியில் திமுக வேட்பாளராக தா.மோ.அன்பரசனும், அதிமுக வேட்பாளராக பா.வளர்மதியும் போட்டியிட்டனர். இருவருமே முன்னாள் அமைச்சர்களாகவும் இருந்தவர்கள். அதிமுகவில் உட்கட்சிப் பூசல் நிலவியதாலும், தொகுதிக்கு புதியவராக பா.வளர்மதி இருந்ததாலும் இத்தொகுதி திமுக வேட்பாளரான தா.மோ.அன்பரசனுக்கு சாதகமாக அமைந்தது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலிருந்தே திமுக முன்னிலை வகித்தே வந்தது. அதிமுகவை விட 40,571 வாக்குகள் வித்தியாசத்தில் ஆலந்தூர் தொகுதியை திமுக கைப்பற்றியிருக்கிறது.

உத்தரமேரூர் தொகுதியில் திமுக வெற்றி

திமுக வேட்பாளராக க.சுந்தரும், அதிமுக வேட்பாளராக வி.சோமசுந்தரமும் போட்டியிட்டனர். இருவரும் உள்ளூர்க் காரர்களாகவும், அந்தந்த கட்சியின் மாவட்ட செயலாளர்களாகவும், தொகுதியில் செல்வாக்கு மிக்கவர்களகவும் இருந்ததால் இருவருக்குமிடையே கடுமையான போட்டி நிலவியது.

வி.சோமசுந்தரம் முன்னாள் கைத்தறித்துறை அமைச்சராகவும், க.சுந்தர் ஒருவரே 4 முறை இத்தொகுதியில் எம்.எல்.ஏ.வாகவும் இருந்து இப்போது 5 வது முறையாகவும் வெற்றி பெற்றிருக்கிறார்.

வாக்கு எண்ணிக்கையின் போது தொடக்கத்திலிருந்தே மிகக்குறைந்த வித்தியாசத்தில் இருவரும் ஒருவரையொருவர் முன்னிலை வகித்துக் கொண்டே இருந்தனர். அதிமுகவில் தனக்கு போட்டியிட வாய்ப்பு வழங்காததால் தீடீரென அக்கட்சியிலிருந்து விலகிய முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் அமமுகவில் இணைந்து இத்தொகுதியில் களம் இறங்கி 7211 வாக்குகளும் பெற்றுள்ளார். இவர் பெற்ற வாக்குகள் அதிமுகவினரின் வாக்குகளாக இருக்க கூடும் எனவும் பரவலாக பேசப்படுகிறது.

அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளரான க.சுந்தர் 1622 வாக்குகள் வித்தியாசத்தில் உத்தரமேரூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி

திமுக கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான காங்கிரஸுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற கே.பழனி அதிமுக வேட்பாளராகவும், காங்கிரஸ் வேட்பாளராக கு.செல்வப் பெருந்தகையும் போட்டியிட்டனர். கே.பழனி தொகுதியில் செல்வாக்கு மிக்கவராகவும், கு.செல்வப் பெருந்தகை தொகுதிக்குப் புதியவராகவும் இருந்த நிலையில் காங்கிரஸ் 11,087 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று தொகுதியை கைப்பற்றியிருக்கிறது.

திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் இத்தொகுதியில் வெற்றியை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம் தொகுதியில் திமுக வெற்றி

கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற சி.வி.எம்.பி.எழிலரசன் இத்தேர்தலிலும் திமுக வேட்பாளராக போட்டியிட்டார். அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாமகவுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.

பாமக வேட்பாளர் பெ.மகேஷ்குமார் அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராகவும், திமுக வேட்பாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் அக்கட்சியின் மாநில மாணவரணி செயலாளராகவும் பொறுப்பில் இருந்து வருபவர்கள்.

பாமக வேட்பாளரான பெ.மகேஷ்குமார் கடந்த 2016 தேர்தலில் போட்டியிட்ட போது 30102 வாக்குகள் பெற்றிருந்தார். இத்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்திருந்ததால் அவரே வெற்றி பெறுவார் என்ற பலத்த எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் அதற்கு மாறாக திமுக வெற்றி பெற்றிருக்கிறது.

காஞ்சிபுரம் தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்படவில்லையே என்ற வருத்தம் அக்கட்சி தொண்டர்களை சோர்வடைய செய்திருந்த நிலையில் அதுவே திமுக வேட்பாளருக்கு சாதகமாகவும் அமைந்தது. சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது தொகுதிக்கு செய்த நன்மைகள் மற்றும் சட்டப் பேரவையில் பேசிய விபரங்கள் ஆகியன இரண்டும் தனித்தனியாக இரு புத்தகங்களாக்கி முக்கிய சங்கங்களின் நிர்வாகிகளை சந்தித்து வழங்கி தீவிர வாக்கு வேட்டையிலும் ஈடுபட்டார்.

மீண்டும் வெற்றி பெற்றால் என்னென்ன செய்யப் போகிறேன் என்ற துண்டுப் பிரசுரமும் வெளியிட்டார். இவையனைத்தும் இவரது வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது. அது மட்டுமின்றி கூட்டணிக் கட்சியினரின் ஒத்துழைப்பு, தெருமுனைப் பிரச்சாரம் ஆகியனவும் இவருக்கு கைகொடுத்து வெற்றிக்கனியை பறிக்க வைத்திருக்கிறது.

11,595 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக காஞ்சிபுரம் தொகுதியையும் கைப்பற்றியிருக்கிறது. எனவே, மொத்தத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றி திமுகவின் வசம் மாவட்டம் முழுவதும் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : காஞ்சிபுரம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT