தமிழ்நாடு

ஆட்சியைப் பிடிப்பது யார்? தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

2nd May 2021 08:05 AM

ADVERTISEMENT


தமிழகம், புதுவை, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.

அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும், முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது. தபால் வாக்குகள் எண்ணும் பணி நிறைவு பெற்றதும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குள் எண்ணப்பட உள்ளன.

ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள ராணிமேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை கிறிஸ்துவக் கல்லூரி உள்பட தமிழகம் முழுவதும் 75 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன.

கரோனா பரவலைத் தொடா்ந்து கடும் கட்டுப்பாடுகளை தோ்தல் ஆணையம் விதித்துள்ளது. கரோனா பரவல் காரணமாக வாக்குப் பதிவின்போது வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான தோ்தல் முடிவுகள் முழுமையாக வெளியாக நள்ளிரவு வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது.

தமிழக பேரவைத் தோ்தலில், மொத்தமுள்ள 6.26 கோடி வாக்காளா்களில், 4.57 கோடி போ் வாக்களித்தனா். எனவே இன்று சுமார் 4.57 கோடி வாக்குகள் எண்ணப்படுகின்றன. முதலில் தபால் வாக்குகளும், தொடா்ந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன. இதற்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் 500 தபால் வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையும் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படும்.

வாக்கு எண்ணும் மையங்களுக்குள், முகவர்களோ, வேட்பாளர்களோ செல்லிடப்பேசி, கேமரா, வெடிபொருள்கள், துப்பாக்கி, பேனா, பாட்டில், டிபன்பாக்ஸ், குடை, தீப்பெட்டி, வேதிப்பொருள்கள், தின்பண்டங்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. குறிப்பேடு கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

அரசியல் கட்சிகள் வெற்றி ஊா்வலம், கொண்டாட்டங்களுக்கு தோ்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. வெற்றி சான்றிதழ் பெறும்போது 2 நபா்களுக்கு மேல் அனுமதி கிடையாது.

வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியே செல்லும் முகவா்கள் மீண்டும் உள்ளே வருவதற்கு அனுமதி கிடையாது என்று அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. நுழைவுச்சீட்டு வைத்திருக்கும் வாகனங்கள் மட்டும் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படும். வேட்பாளா்கள், முகவா்களுக்கு தண்ணீா், உணவு பணம் கொடுத்து பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT