தமிழ்நாடு

கார்த்தி சிதம்பரம் மனைவியின் புகைப்படத்தை விளம்பரத்துக்குப் பயன்படுத்திய தமிழக பாஜக

31st Mar 2021 11:26 AM

ADVERTISEMENT


சென்னை: காங்கிரஸ் நாடாளுமனற் உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் மனைவியும், பரதநாட்டிக் கலைஞருமான ஸ்ரீநிதியின் புகைப்படத்தை, தமிழக பாஜக தனது தேர்தல் விளம்பரத்துக்காகப் பயன்படுத்தியது விமரிசனத்துக்கு உள்ளாகியுள்ளது.

இது தொடர்பாக கடுமையான விமரிசனங்கள் முன்வைக்கப்பட்டதையடுத்து, தமிழக பாஜக தனது சுட்டுரைப் பக்கத்திலிருந்து அந்த புகைப்படத்தை நீக்கிவிட்டது. 

அதாவது, ஸ்ரீநிதி பரதநாட்டியம் ஆடும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, அதனுடன் தாமரை மலரட்டும், தமிழகம் வளரட்டும், வாக்களிப்பீர்.. தாமரைக்கே என்று தமிழக பாஜக தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளது. இப்படி தமிழக பாஜகவின் தேர்தல் விளம்பரத்துக்கு, ஒரு காங்கிரஸ் எம்பி மனைவியின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருப்பது குறித்து பொதுமக்கள் பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டனர்.

ADVERTISEMENT

அதோடு நின்றுவிடவில்லை இந்த விவகாரம். தமிழக பாஜகவின் அந்த விளம்பரத்தைப் பார்த்த ஸ்ரீநிதி, அதற்கு ஒரு கருத்தையும் பதிவிட்டுள்ளார்.  அதாவது, எனது புகைப்படத்தை, தமிழக பாஜக தனது தேர்தல் விளம்பரத்துக்குப் பயன்படுத்தியிருப்பது மிகவும் அபத்தமானது. தமிழகத்தில் தாமரை என்றும் மலராது என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இந்தப் புகைப்படம், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியால் எழுதப்பட்டு, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த செம்மொழி பாடலுக்கு ஸ்ரீநிதி நடனமாடிய போது எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக, சமூக வலைத்தளத்தில் 5.16 நிமிடங்கள் ஒளிபரப்பாகும் ஒரு பாடலை அதாவது தாமரை மலரட்டும், தமிழகம் வளரட்டும் என்ற தலைப்பிலான பாடலை, ஸ்ரீநிதியின் பரதநாட்டியத்துடன் இரண்டு நாள்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது. இதனைப் பார்த்த மக்கள், பாஜகவின் பாடலை கிண்டலடித்து கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர்.

பல்வேறு விமரிசனங்கள் எழுந்ததால், செவ்வாய்க்கிழமை இரவு அந்த பாடலையும், புகைப்படத்தையும் பாஜக தொழில்நுட்பப் பிரிவினர் நீக்கிவிட்டனர். பாஜக விளம்பரப் பாடல்கள் உருவாக்கும் பணியை வெளி நிறுவனத்துக்குக் கொடுத்திருந்ததாகவும், அந்த நிறுவனம் இதுபோன்ற தவறை செய்துவிட்டதாகவும் தமிழக பாஜக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஒருபடி மேலே சென்று, காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் மனைவியின் நடனப் புகைப்படத்தை, பாஜக தேர்தல் விளம்பரத்துக்குப் பயன்படுத்தியிருக்கிறது விமரிசனங்களை எழுப்பியது. அந்த அளவுக்கு விளம்பரங்களில் இடம்பெற மக்கள் பஞ்சம் நிலவுகிறதா? என்றும் சமூகவலைத்தளங்களில் கருத்துகள் பதிவிடப்படுகிறது.
 

Tags : congress Tamil Nadu BJP MP Karti Chidambaram
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT