தமிழ்நாடு

10.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு தற்காலிகமானதா?, நிரந்தரமானதா? - ப.சிதம்பரம் கேள்வி

31st Mar 2021 10:46 AM

ADVERTISEMENT


சென்னை: வன்னியா்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு தற்காலிகமானதா?, நிரந்தரமானதா? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 

கடந்த மாதம் சட்டப்பேரவையில் தமிழகத்தில் கல்வி - வேலைவாய்ப்பில் வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அதற்கு தமிழக ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளாா். அதைத் தொடா்ந்து வன்னியா்கள் 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டுச் சட்டம் தமிழக அரசிதழிலும் வெளியிடப்பட்டிருக்கிறது.

சட்டப்பேரவையில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டால் அது நிரந்தரமான சட்டம் தான். சட்டத்தில் தற்காலிக சட்டம் என்று ஒன்றும் கிடையாது. பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம், அதற்கு மாற்றாக மற்றொரு சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும் வரை நீடிக்கும். இது தான் நடைமுறையாகும்.

வன்னியா்களுக்கான உள் ஒதுக்கீடு நிரந்தரமானது அல்ல என்று  துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கூறியதாக செய்திகள் பரவியது.  

ADVERTISEMENT

இந்த நிலையில் வன்னியா் உள் ஒதுக்கீட்டுக்காக இயற்றப்பட்ட சட்டம் நிரந்தமானது தான்; சட்டங்களில் தற்காலிக சட்டம் எதுவும் இல்லை என்பதை முதல்வர் உறுதி செய்ததாகவும், இந்த விவகாரத்தில் முதல்வா் தெளிவாக இருக்கிறாா். ஆனால், திமுக ஆதரவு ஊடகங்கள் திட்டமிட்டு விஷமப் பிரசாரம் செய்கின்றன என்று ராமதாஸ் கூறியிருந்தார். 

இந்நிலையில், வன்னியா்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு தற்காலிகமானதா?, நிரந்தரமானதா? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக சுட்டுரை பதிவில் அவர் கூறியிருப்பதாவது: வன்னியர்களுக்கான 10.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு தற்காலிகமானது என்று துணை முதல்வர் கூறுகிறார். அவருக்குத் தென் மாவட்டங்களின் கவலை. 

இல்லையில்லை, 10.5 சதவிகிதம் நிரந்தரமானது என்று சட்ட அமைச்சர் கூறுகிறார். அவருடைய கவலை அவருக்கு.

மேலும் முதல்வர் என்ன சொல்லப்போகிறார்? எல்லாவற்றுக்கும் மேலாக ‘ஒதுக்கீடு’ என்ற கொள்கையில் நம்பிக்கை இல்லாத பாஜக என்ன சொல்லப் போகிறது? என்று சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 

Tags : P. Chidambaram Question 10.5 percent internal allocation
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT