தமிழ்நாடு

ரூ. 59 ஆயிரத்துக்கு ஏலம்போன எலுமிச்சைப் பழம்! விழுப்புரம் அருகே சுவாரஸ்யமான சம்பவம்

31st Mar 2021 09:24 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் அருகே கோயில் திருவிழாவில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழம் ரூ.59 ஆயிரத்துக்கு ஏலம்போனது.

விழுப்புரம் அருகே திருவெண்ணெய்நல்லூரை அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில், இரட்டை குன்று மீது பழைமையான ரத்தினவேல் முருகன் கோயில் உள்ளது. சின்ன மயிலம் என்றும், இரட்டை குன்று முருகன் கோயில் என்றும் அழைக்கப்படும் இந்தக் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டு தோறும் 11 நாள்கள் நடைபெறும். நிகழாண்டு பங்குனி திருவிழா கடந்த மாா்ச் 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ADVERTISEMENT

எலுமிச்சை பழங்களை ஏலம் விட்ட ஊர் நாட்டாமை.

நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டு, வீதியுலா நடைபெற்றது. 7-ஆம் நாள் நிகழ்வாக திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடா்ந்து, தோ்த் திருவிழா, பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்றன. முதல் 9 நாள்கள் விழாவின்போது, கோயிலில் உள்ள வேல் மீது ஒவ்வொரு நாளும் ஒரு எலுமிச்சை பழத்தை வைத்து பூஜை செய்யப்படும். பூஜை செய்யப்பட்ட 9 எலுமிச்சை பழங்களும் விழாவின் 11-ஆம் நாள் இரவு ஏலம் விடப்படும்.

நிகழாண்டு பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்களும் மாா்ச் 29-ஆம் தேதி (திங்கள்கிழமை) இரவு ஏலம் விடப்பட்டன. பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்களை குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியா் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் பெறுவாா்கள் என்பது, மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால், இந்த எலுமிச்சைப் பழங்களை ஏலம் எடுக்க பல்வேறு ஊா்களில் இருந்தும் திரளானோா் பங்கேற்றனா்.

வள்ளி தெய்வானை சமேத முருகன்.

ஊா் மக்கள் முன்னிலையில், ஊா் நாட்டாமை பாலகிருஷ்ணன் எலுமிச்சைப் பழங்களை ஏலமிட்டாா். முதல் நாள் பழத்தை கடலூா் கூத்தப்பாக்கம், நாராயணன்-வளா்மதி தம்பதியினா் ரூ.59ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தனா். இரண்டாம் நாள் பழம் ரூ.19 ஆயிரத்துக்கும், மூன்றாம் நாள் பழம், ரூ.25 ஆயிரத்துக்கும், நான்காம் நாள் பழம் ரூ.14,500-க்கும் ஏலம் போனது. 

ஐந்தாம் நாள் பழம் ரூ.11 ஆயிரத்துக்கும், ஆறாம் நாள் பழம் ரூ.23,00-க்கும், ஏழாம் நாள் பழம் ரூ.5 ஆயிரத்துக்கும் ஏலம் போனது. எட்டாம் நாள் பழம் ரூ.4,200-க்கும், ஒன்பதாம் நாள் பழம் ரூ.3,900-க்கும் ஏலம் போனது. இதன்படி, 9 எலுமிச்சை பழங்களும் மொத்தமாக ரூ. ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 900-க்கு ஏலம் போனது. 

கோயிலில் உள்ள வேல்.

இதன்படி, 9 எலுமிச்சை பழங்களும் மொத்தமாக ரூ. 1 லட்சத்து 43 ஆயிரத்து 900 க்கு ஏலம் போனது.

நம்பிக்கைக்கு எவ்வளவு  வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்பது ஒருபுறம் என்றால், ஆன்மீகத்துடன் கலந்த நம்பிக்கைக்கு பணம் பெரிதல்ல என்று இதுபோன்ற சம்பவங்கள் நம் கண்முன்னே காட்டத்தான் செய்கிறது.
 

Tags : Lemon auctioned Rs.59 thousand Interesting incident
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT