தமிழ்நாடு

ஆவடி தொகுதி தேர்தலை தள்ளிவைக்கக் கோரிய மனு தள்ளுபடி

29th Mar 2021 11:35 AM

ADVERTISEMENT

ஆவடி தொகுதியில் தேர்தலை தள்ளிவைக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டாபிராமைச் சேர்ந்த எம்ஜிஆர் விஸ்வநாதன் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2016-ஆம் ஆண்டு எம்ஜிஆர் மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி தொடங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளேன். 

பல தேர்தல்களில் போட்டியிட்டுள்ளேன்.வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட டார்ச் லைட் சின்னத்தை திரும்ப அளித்து விட்டு எம்ஜிஆரை நினைவுகூறும் வகையில் ஆட்டோ ரிக்‌ஷா, தொப்பி ஆகிய சின்னங்களில் ஒன்றை ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்துக்கு விண்ணப்பித்தேன். 

இந்த தேர்தலில் எங்கள் கட்சி  ஆவடி, எடப்பாடி, சேலம் வடக்கு, ஈரோடு கிழக்கு, வேளச்சேரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் ஆவடி தவிர மற்ற தொகுதிகளில் ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆவடி தொகுதியில் பொது சின்னங்களின் பட்டியலில் ஆட்டோ ரிக்‌ஷா இருந்தும் அந்த சின்னத்தை அங்கு போட்டியிடும் எனக்கு ஒதுக்கவில்லை. எனவே ஆவடி தொகுதி தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட வேண்டும்.  ஆட்டோ ரிக்‌ஷா சின்னத்தை ஒதுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.  

அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், சின்னங்கள் கேட்பது, ஒதுக்குவதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டதால் மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்க வாய்ப்பில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. 

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஆவடி தொகுதி தேர்தலை தள்ளிவைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


 

Tags : high court
ADVERTISEMENT
ADVERTISEMENT