தமிழ்நாடு

தேர்தல் பணி ஒதுக்கீட்டில் குளறுபடி: சீரமைக்க தமிழக ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

29th Mar 2021 06:10 PM

ADVERTISEMENT

 

சட்டப் பேரவைத் தேர்தல் பணி ஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என தமிழக ஆசிரியர் கூட்டணியினர் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து தமிழக ஆசிரியர் கூட்டணியினர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது, 

திருப்பூர் உள்பட்ட 8 தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்ற பல்வேறு அலுவலர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்குப் பணி வழங்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதால், வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நாளில் பணிகளில் சுணக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாகப் பல ஆண்டுகள் பணியாற்றி,  தேர்தல் பணிகளில் அனுபவமும், வாக்குப்பதிவு இயந்திரத்தை நன்கு கையாளும் திறமையும் தகுதியும் கொண்ட தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்டோருக்கு வாக்குச் சாவடி தலைமை அலுவலர் பணி வழங்காமல், இதற்கு மாறாக வாக்குப்பதிவு அலுவலர் 1 முதல் 3 முதல் உள்ள பணிகள் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் தொகுப்பூதிய ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், இடைநிலையாசிரியர்கள் உள்ளிட்டோருக்கு வாக்குச் சாவடி தலைமை அலுவலர் பணி வழங்கப்பட்டுள்ளன.  மேலும் பள்ளி சத்துணவு சமையலர்கள், துப்புரவுப் பணியாளர்களுக்கு வாக்குப்பதிவு அலுவலர் பணி வழங்கப்பட்டுள்ளது. 

வாக்குப்பதிவு அலுவலர் 2, படிவம் 17ஏ  பதிவேட்டில் வாக்காளர் கொண்டு வரும் அடையாள அட்டை மற்றும் பிற ஆவணங்களைப் பார்த்து கடைசி நான்கு இலக்கங்களை எழுத வேண்டியுள்ளது. இந்த குளறுபடிகளால் தேர்தல் பணி வேகமாக நடைபெறாமல் சுணக்கம் ஏற்படும்.

மேலும் இக்குளறுபடிகள் குறித்துச் சம்மந்தப்பட்ட சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு முறையாக பட்டியல் அளித்தும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ஆகவே, இது குறித்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தனிக்கவனம் செலுத்தி உரிய மாற்றம் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT