தமிழ்நாடு

திமுக தோற்ற பின் ஸ்டாலின் எப்படி வரப் போகிறார் என்று தெரியவில்லை: முதல்வர் பழனிசாமி

29th Mar 2021 03:30 PM

ADVERTISEMENT

 

பேரவைத் தேர்தலில் திமுக தோற்பது உறுதி. அதற்குப் பிறகு ஸ்டாலின் எப்படி வரப் போகிறார் என்பது தெரியவில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி மு. பழனிசாமி இன்று (29.3.2021) சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாநகர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஆற்றிய உரை, கோவையில் திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி அவர்கள், ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும் போது, பெண்களை கொச்சைப்படுத்தி, கீழ்த்தரமாக பேசுகிறார். தி.மு.க. என்றாலே பெண்களுக்கு கொடுமை இழைக்கக்கூடியவர்கள். அதிலும் தேர்தல் நேரத்தில் மிகவும் கொச்சைப்படுத்தி, கீழ்த்தரமாக பேசுகிறார்கள். பெண்களின் இடுப்பை கொச்சைப்படுத்தி திண்டுக்கல் லியோனி பேசிய பேச்சை நீங்கள் தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் பார்த்திருப்பீர்கள். அவர்களுக்கு நீங்கள் தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும். 

ஆட்சியில் இல்லாதபோதே இப்படி என்றால், ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று சொல்வார்கள். தி.மு.க. எப்பொழுதுமே ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் அராஜகம், அடாவடிதான் செய்வார்கள்.

ADVERTISEMENT

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக உறுப்பினர்களின் ஆதரவோடு நான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது ஆளுநர் அவர்கள் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்கள். அதனை ஏற்று நாங்கள் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடந்தபோது, சட்டமன்றத்தில் திமுகவினர் செய்த அராஜகம் கொஞ்சம் நஞ்சமல்ல. மக்களுக்கு நன்மைகளை செய்ய திட்டங்களை போடுகின்ற அந்த புனிதமான மாமன்றத்தில், சட்டமன்ற உறுப்பினர்களின் மேஜைகளின் மீது ஏறி திமுக உறுப்பினர்கள் நடனம் ஆடினார்கள். அதற்காகவா மக்கள் உங்களுக்கு ஒட்டு போட்டு சட்டமன்றத்திற்கு அனுப்பினார்கள். சட்டப்பேரவை தலைவர் அவர்களை தள்ளிவிட்டு அவரது இருக்கையில் அமர்ந்தார்கள். பெரும்பான்மை நிரூபிக்கப்பட்ட பிறகு ஸ்டாலின் சட்டையை கிழித்துக் கொண்டு வெளியில் வருகிறார். சட்டமன்றத்திலே இவ்வளவு அராஜகம் செய்யும் திமுகவினர் கைகளில் நாட்டை கொடுத்தால் மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும் என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த தேர்தலில் திமுக தோற்பது உறுதி. அதற்கு பிறகு ஸ்டாலின் எப்படி வரப் போகிறார் என்பது தெரியவில்லை.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு, நரம்பியல் பிரிவு ஆகியவற்றிற்கு சிறப்பு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. மழைக் காலங்களில் வெள்ள நீர் நகருக்குள் செல்லாமல் தடுக்க ஏறத்தாழ ரூபாய் 62 கோடி செலவில் ஒட்ரி நல்ல கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய் மற்றும் கூவம் ஆற்றில் வெள்ளத் தடுப்புப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அறிஞர் அண்ணா சித்தா மருத்துவமனைக்கு ரூபாய் 23 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது என்றும் முதல்வர் பழனிசாமி கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT