தமிழ்நாடு

இறைவன், இயற்கை, மக்கள் எங்கள் பக்கம்: முதல்வர் பழனிசாமி

29th Mar 2021 01:35 PM

ADVERTISEMENT

 

சென்னை: இறைவன், இயற்கை மற்றும் மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர் என்று சென்னையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி இன்று சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தியாகராயநகர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ஆற்றிய உரையில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் போகும் இடமெல்லாம் என்னைப்பற்றித்தான் பேசி வருகிறார். எடப்பாடி பழனிசாமி பல்லாண்டு வாழவேண்டும் என்று கூறிவருகிறார். இவர் சொல்லியா நான் வாழ வேண்டும், இறைவன் அருளால் நான் வாழ்கின்றேன். நாங்கள் தெய்வ பக்தி உடையவர்கள். உங்களைப் போல, கோவிலுக்கு சென்றால் விபூதியை அழிப்பவர்கள் அல்ல. தேவர் திருமகனாரின் நினைவிடத்திற்குச் சென்ற போது, அங்கு வழங்கிய திருநீரை கீழே கொட்டியவர் ஸ்டாலின். ஆனால், நாங்கள் உண்மையான தெய்வ பக்தி கொண்டவர்கள்.

தி.மு.க.வினர் மக்களுக்காக அதிமுக அரசு எதுவுமே செய்யவில்லை என்று கூறி வருகின்றனர். அவர்கள் தி.நகருக்கு வந்து பார்க்கட்டும். சிங்கப்பூர் மாதிரி அருமையாக, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகர் பாண்டிபஜார் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது. மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து தி.நகர் ரயில் நிலையம் வரை ரூ.20 கோடி மதிப்பீட்டில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்.  ரங்கராஜபுரம் ரயில்வே பாலம் கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்பட்டது. கோடம்பாக்கம் பாலம் பழுதுபார்க்கப்பட்டு சீரமைக்கப்பட்டது. ரூ.11 கோடியில் 121 தார்சாலைப்பணிகள் இந்தப்பகுதியில் செய்யப்பட்டுள்ளது. 127 சாலைப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ரூ.6 கோடி செலவில் 34 சிமெண்ட் கான்கிரீட் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன, 15 பணிகள் நடைபெற்று வருகின்றன. 

ADVERTISEMENT

சென்னை மாநகரத்தில் இருக்கின்ற அனைத்து மருத்துவமனைகளிலும் உயர்தர சிகிச்சை அளிப்பதற்காக உயர்தர மருத்துவ கருவிகளை வழங்கி இருக்கிறோம். இந்தியாவிலேயே கரோனா வைரஸ் கட்டுப்படுத்துவதில் முதல் மாநிலம் தமிழ்நாடு. பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை எடுத்தோம். அந்த பரிசோதனைக்கு செலவு அதிகம். எங்களுக்கு தமிழ்நாட்டு மக்களின் உயிர் தான் முக்கியம், பணம் முக்கியமில்லை என்று பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை எடுத்தோம். அதில் நோய் அறிகுறி தென்பட்டால் உரிய சிகிச்சை அளித்து அவர்களை குணமடைய செய்து, வீட்டிற்கு அனுப்பி வைத்தோம். 

மழை மற்றும் புயல் வந்தாலும் சென்னை மாநகர மக்களுக்கு தடையில்லா மின்சாரம் கொடுக்க வேண்டும் என்பதற்காக அம்மாவுடைய அரசு பூமிக்கு அடியில் மின்பாதை அமைத்து கேபிள் மூலம் மின்சாரம் கொடுக்கின்றோம். மழை காலத்திலும் தடையில்லா மின்சாரம் கொடுக்கின்றோம் அதனால் புதிய புதிய தொழிற்சாலைகள் சென்னைக்கு வந்து கொண்டு இருக்கின்றன. 

தமிழ்நாடு முழுவதும் 2.5 இலட்சம் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதனால், உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதால் குற்றங்கள் பெருமளவில் குறைந்து, ஜாதி, மதச் சண்டைகள் இல்லாமல் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கிறது. எனவே, வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறது.

சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் அனைத்திலும் நீர் நிரம்பியுள்ளது. எங்கள் ஆட்சி சிறப்பான ஆட்சி என்பதற்கு இயற்கையே சாட்சி திரு.ஸ்டாலின் அவர்களே. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அணைகளிலும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் நீர் நிரம்பியுள்ளது. ஆகவே, இறைவன், இயற்கை மற்றும் மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT