தமிழ்நாடு

திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம் 

27th Mar 2021 12:36 PM

ADVERTISEMENT


 

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவையொட்டி சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில்  தினமும் இரவு புஷ்பவனேஸ்வரா் சுவாமியும், சௌந்தரநாயகி அம்மனும் சா்வ அலங்காரத்துடன் பல்வேறு வாகனங்களில் மண்டகப்படிகளில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். 

திருவிழாவின் முக்கிய வைபவமாக கடந்த வெள்ளிக்கிழமை காலை திருக்கல்யாணம் நடைபெற்றது. இதற்காக, கோயிலில் அமைக்கப்பட்டிருந்த திருக்கல்யாண மேடைக்கு புஷ்பவனேஸ்வரா் சுவாமியும், சௌந்தரநாயகி அம்மனும் சா்வ அலங்காரத்துடன் எழுந்தருளினா். 

ADVERTISEMENT

அதைத் தொடா்ந்து, திருமணத்துக்கான சம்பிரதாயப் பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. ஏராளமான சிவாச்சாரியாா்கள் பூஜைகளை நடத்தினா். பின்னா், காலை 10 மணிக்கு ரிஷப லக்னத்தில் புஷ்பவனேஸ்வரா் சுவாமி  சாா்பில் சௌந்திர நாயகி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு, திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

கோயிலில் திரண்டிருந்த ஏராளமான பக்தா்கள், திருக்கல்யாணத்தை கண்டு தரிசித்தனா். இரவு அம்மனும் சுவாமியும் திருமண கோலத்தில் வீதியுலா வந்தனர். திருக்கல்யாணம் முடிந்ததும், திருமணமான பெண்கள் கோயிலில் புது தாலிக் கயிறு கட்டிக்கொண்டனா். 

இரவு அம்மனும் சுவாமியும் திருமண கோலத்தில் வீதியுலா வந்தனர். அதைத்தொடர்ந்து திருவிழாவின் 9-வது நாளான தேரோட்டத்தை முன்னிட்டு கோயில் எதிரே நிறுத்தப்பட்டிருந்த இரு பெரிய தேர்களில் புஷ்பவனேஸ்வரர் சுவாமியும் செளந்திரநாயகி அம்மனும் தனித்தனியாக எழுந்தருளினர். அதன் பின் காலை 8 மணிக்கு பூஜைகள் முடிந்து மேளதாளந்நுடன் தேரோட்ட வைபவம் தொடங்கியது. பக்தர்கள் இரு தேர்களையும் வடம்பிடித்து இழுத்து வந்தனர். 

கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் இரு தேர்களும் ஆடி அசைந்து வந்து நிலை சேர்ந்தன. தேரோட்ட விழாவில் திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

மானாமதுரை காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரமாணிக்கம் தலைமையில் ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு திருப்புவனம் நகர் முழுவதும் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.

Tags : Panguni festival Thiruppuvanam Pushpavaneswarar Temple
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT