தமிழ்நாடு

மயிலம் முருகர் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்று வடபிடித்தனர்

27th Mar 2021 11:20 AM

ADVERTISEMENT


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்திர தோ்த் திருவிழா சனிக்கிழமை (மாா்ச் 27) நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர்.

திண்டிவனத்தை அடுத்த மயிலத்தில் புகழ்பெற்ற ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரப் பெருவிழா வெகு விமா்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். நிகழாண்டு பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதைத் தொடா்ந்து, கோயிலில் தினந்தோறும் ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மேலும், பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா். 8 ஆம் நாள் திருவிழாவான வெள்ளிக்கிழமை இரவு திருக்கல்யாணமும், வெள்ளி குதிரை வாகன உற்சவமும் நடந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தோ்த் திருவிழா சனிக்கிழமை காலை 6 மணியளவில் நடந்தது. தேரில் வள்ளி, தெய்வாணை சமேத சுப்ரமணிய சுவாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரை மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20 ஆம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலயசுவாமிகள் வடம்பிடித்து தொடங்கி வைத்தார். அப்போது மயிலம் முருகனுக்கு அரோகரா, அரோகரா என்ற கோஷம் விண்ணை முட்டும் அளவிற்கு இருந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர்.

பங்குனி உத்திர திருவிழாவையட்டி பக்தர்கள் நேர்த்திக் கடனுக்காக அலகு குத்தியும், காவடி ஏந்தியும் மலையேறினர். தோ்த் திருவிழாவில் விழுப்புரம் மட்டுமன்றி, பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனர்.  

சனிக்கிழமை இரவு முத்து விமான உற்சவமும், வரும் 28 ஆம் தேதி காலை பங்குனி உத்திரம், தீர்த்தவாரி உற்சவமும், இரவு தெப்பல் உற்சவமும் நடக்கிறது. 29 ஆம் தேதி இரவு முத்துப்பல்லக்கு உற்சவமும் நடக்கிறது. பங்குனி உத்திரத் திருவிழா வருகிற 30-ஆம் தேதி சண்டிகேஸ்வரா் உற்சவத்துடன் நிறைவடைகிறது.

Tags : Therottam Panguni Uttaram Mayilam Murugan Temple
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT