தமிழ்நாடு

உயரழுத்த மின் கம்பி அறுந்து விழுந்தது: சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

27th Mar 2021 11:01 AM

ADVERTISEMENT

 
வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உயரழுத்த மின்கம்பி திடீரென அறுந்து விழுந்ததால், சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில்  சனிக்கிழமை காலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம் துணை மின் நிலையத்தில் இருந்து, வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. பெரிய கிருஷ்ணாபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிக்கு மின் வினியோகம் செய்யும் மின்பாதை, பெரிய கிருஷ்ணாபுரம் சரவணா தியேட்டர் அருகே சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்கிறது. 

இந்நிலையில், சனிக்கிழமை காலை 8 மணியளவில் எதிர்பாராத விதமாக, திடீரென உயரழுத்த மின் கம்பி, மின் பாதையில் இருந்து அறுந்து சாலையில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்போது அவ்வழியாக வாகனங்களில் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

சாலையில் மின் கம்பி அறுந்து விழுவதைக் கண்ட வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்திக் கொண்டனர். அதனால் அரை மணி நேரத்திற்கு மேலாக சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இது குறித்து இப்பகுதி மக்கள் மின் வாரியத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, விரைந்து சென்ற  மின்வாரிய பணியாளர்கள், சாலையில் விழுந்து கிடந்த மின்கம்பியை அப்புறப்படுத்தினர். இதன் பின்னர் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

வாழப்பாடி அருகே உயரழுத்த மின்கம்பி திடீரென சாலையில் அறுந்து விழுந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

Tags : High voltage power line Salem-Chennai National Highway
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT