தமிழ்நாடு

மாரநாடு கருப்பணசாமி கோவிலில் களரி உற்சவ விழா

27th Mar 2021 04:29 PM

ADVERTISEMENT


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் மாரநாடு கருப்பண சுவாமி கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு களரி உற்சவ விழா விடிய விடிய நடைபெற்றது.

தென் மவட்டங்களில் மாரநாடு கருப்பணசாமி கோயில் பிரசித்தம் பெற்றதாகும். இக்கோயிலின் களரி உற்சவ விழாவை முன்னிட்டு கோயில் முழுவதும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது. இரவுப் பொழுது தொடங்கியதும் கருப்பனுக்கு அபிஷேகம் நடத்தி சந்தனம் சாற்றி மலர் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடந்தன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கருப்பணுக்கு உகந்த மலர் மாலைகளை காணிக்கையாக செலுத்தி கருப்பணை தரிசனம் செய்தனர். நள்ளிரவு கோயில் முன்பு உள்ள களரி பொட்டலில் சாமியாட்டம் நடைபெற்றது. 

கருப்பண் பத்திரகாளி உள்ளிட்ட கோயில் பரிவார தெய்வங்கள் சார்பில் கச்சை கட்டிய சாமியாடிகள் களரி பொட்டலில் விடிய விடிய சாமியாடி வந்தனர். அதிகாலைப் பொழுதில் அருள்வாக்கு கூற கருப்பணை அழைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சாமி ஆட்டத்தை பார்க்கவும் கருப்பண் அருள்வாக்கை கேட்கவும் களரியைச் சுற்றி திரளான பக்தர்கள் கூடியிருந்தனர். கருப்பணுக்கு காணிக்கையாக செலுத்தப்படட மாலைகள் களரி பொட்டலில் உள்ள உயரமான கம்பத்தில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த மாலைகளை வீடுகளுக்கு எடுத்துச் சென்று வைத்து வழிபட்டால் மங்களம் உண்டாகும் என்ற நம்பிக்கை உள்ளதால் சனிக்கிழமை அதிகாலை சாமி ஆட்டம் முடிந்ததும் இந்த காணிக்கை மாலைகளை பக்தர்கள் போட்டி போட்டு வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.
 
சனிக்கிழமை காலை கருப்பணுக்கு பலி கொடுக்கும் நிகழ்வு நடந்தது. அப்போது திரளான பக்தர்கள் கோயில் முன்பு கிடா வெட்டி பொங்கல் வைத்து கருப்பணுக்கு படைத்து வழிபட்டனர்.  மதுரை, மானாமதுரை உள்ளிட்ட இடங்களிலிருந்து மாரநாட்டுக்கு அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.  கருப்பணை தரிசனம் செய்ய பக்தர்கள் கார், வேன், பைக்குகளில் மாரநாடு வந்து குவிந்தனர். களரி உற்சவத்துக்கான ஏற்பாடுகளை மாரநாடு சீமை கிராமத்தார்கள் செய்திருந்தனர்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT