தமிழ்நாடு

'திமுகவினர் தேர்தல் பிரசாரத்தின்போது கண்ணியக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது'

27th Mar 2021 04:50 PM

ADVERTISEMENT

திமுகவினர் தேர்தல் பிரசாரத்தின்போது கண்ணியக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், அன்புடைய திமுக உறுப்பினர்களுக்கு, மக்களிடையே பரப்புரை செய்யும்போது நமது கட்சி மரபையும் மாண்பையும் மனதில் வைத்துச் செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறேன். வெற்றிக்கு முன், வெற்றிக்கான பாதையும் முக்கியமானது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

பரப்புரையில் ஈடுபடும் போது கட்சியினர் உணர்ச்சிவசப்பட்டு, கண்ணியக் குறைவான சொற்களை வெளிப்படுத்திடக் கூடாது. அப்படிப்பட்ட சொற்கள் உதிர்த்திடுவதைக் கண்டிப்பாகத் தவிர்த்திட வேண்டும் என்பதையும், அத்தகைய பேச்சுகளைக் தலைமை ஒருபோதும் ஏற்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பேரறிஞர் அண்ணா வலியுறுத்திய கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு ஆகிய மூன்றில், பேச்சாளர்களின் முதன்மை அம்சமாக இருக்கவேண்டியது கண்ணியமாகும்! அதை நினைவில் கொண்டு பேச வேண்டும்.

ADVERTISEMENT

தி.மு.க. கூட்டணியின் வெற்றி உறுதியாகவும் வலிமையாகவும் மக்களால் தீர்மானிக்கப்பட்டுவிட்ட நிலையில், திமுகவினரின் பேச்சுகளைத் திரித்து, வெட்டி - ஒட்டி, தவறான பொருள்படும்படி செய்து வெற்றியைத் தடுக்க நினைத்து மூக்குடைபட்டவர்கள், இப்போதும் தோல்வி பயத்தால் மீண்டும் அதே பாணியை மேற்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களது எண்ணம் ஈடேறாத வகையில், கவனத்துடன் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் எனக் கட்சியினரைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

Tags : DMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT