தமிழ்நாடு

ஏப்.1 முதல் விவசாயத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்: முதல்வர்

27th Mar 2021 04:05 PM

ADVERTISEMENT

 

களக்காடு: ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விவசாயத்திற்கான மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் தடையின்றி வழங்கப்படும் என்றார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி. 

நான்குனேரி தொகுதி அதிமுக வேட்பாளர் தச்சை என். கணேசராஜாவை ஆதரித்து நான்குனேரி பேருந்து நிலையம் முன் அவர் மேலும் பேசியதாவது, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளனர். தொடர்ந்து அதிமுக அரசு கிராமம் முதல் நகரம் வரை அனைத்து தரப்பினரும் ஏற்றம் பெற பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின்போது, பொய் வாக்குறுதிகளை கூறி வருகிறார். பொய் தான் அவருக்கு மூலதனம். அதிமுகவில் உண்மையாக உழைப்பவர்கள் முதல்வராகக் கூட வந்துவிடலாம். ஆனால் திமுக குடும்பக் கட்சி. வாரிசு அரசியலை மையப்படுத்தி வரும் கட்சி. அங்கு குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படும். அவர்கள் நினைத்தால் தான் வேறு யாரும் அங்கு சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினராக முடியும் என்ற நிலை தான் உள்ளது. 

ADVERTISEMENT

மு.க.ஸ்டாலின் என்னை போலி விவசாயி என்கிறார். நான் தற்போதும் விவசாயம் செய்து வருகிறேன். ஓராண்டுக்கு முன் தூத்துக்குடியில் மு.க. ஸ்டாலின் பதநீர் அருந்தும் போது, ஏன் சர்க்கரை போட்டீர்கள் எனக் கேட்டிருக்கிறார். 50 ஆண்டுகளுக்குப் பின் அதிமுக ஆட்சியில்தான் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள ஏரிகள், கால்வாய்கள், தூர்வாரப்பட்டுள்ளன. இதனால் இந்த ஆண்டு இயற்கையாகவே மழையும் கூடுதலாக பெய்து, அனைத்தும் நீர் நிரம்பியுள்ளன. அதிமுக ஆட்சிக்கு இயற்கையும், கடவுளும் சாதகமாக உள்ளன. விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விவசாயத்திற்கு 24 மணி நேரமும் தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கப்படும். 

அதிமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு உருளை, 100 நாள் வேலைத்திட்டம் 150 நாள்களாக உயர்வு, மாதம் தோறும் இல்லத்தரசிகளுக்கு ரூ.1500 உதவித்தொகை, நிலமற்ற  ஏழைகளுக்கு அரசே சொந்தமாக நிலம் வாங்கி, கான்கிரிட் வீடு கட்டித் தரும். ஆதிதிராவிடர் குடியிருப்பு பழுதடைந்த நிலையிலிருந்தால் அரசே புதிதாக கட்டித் தரும். கூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழு கடன் தள்ளுபடி செய்யப்படும். முதியோர் உதவித்தொகை ரூ.1500 ஆக உயர்த்தப்படும். ரேசன் பொருள் வீடு தேடி வரும். கேபிள் கட்டணமில்லாமல் வழங்கப்படும். இரு சக்கர வாகன உரிம கட்டணம் அரசே செலுத்தும். அம்மா மருந்தகங்களில் 1 மருத்துவர் நியமிக்கப்படுவார். 

தமிழகத்தில் அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டு மக்களின் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. நான்குனேரி தொகுதியில் 11 இடங்களில் அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டுள்ளது. நிகழாண்டு மருத்துவக்கல்லூரிகளில் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு காரணமாக 415 பேர் பயனடைந்துள்ளனர். அடுத்த ஆண்டு 600 பேருக்கும் மேல் பயனடைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதிமுக அரசை மக்கள் எடை போட்டு வைத்துள்ளனர். அடுத்து அமையவிருப்பது அதிமுக ஆட்சிதான். இதனை மக்கள் தீர்மானித்து விட்டார்கள் என்றார் அவர். பிரசாரத்தின் போது, அதிமுக வேட்பாளர் தச்சை என். கணேசராஜா உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
 

Tags : tn cm tamilnadu palanisamy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT