தமிழ்நாடு

தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ அதிமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி

26th Mar 2021 02:23 PM

ADVERTISEMENT

 


சிவகங்கை: தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பொதுமக்கள் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என தமிழக முதல்வரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு சிவகங்கை தொகுதி வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதனுக்கு ஆதரவு கோரி முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது, விவசாயக் குடும்பத்தில் பிறந்த நான் அதிமுகவில் அடிமட்டத் தொண்டனாக சேர்ந்து படிப்படியாக இந்த நிலைக்கு வந்துள்ளேன். திமுக தலைவர் ஸ்டாலின் அவரது தந்தை கட்சித் தலைவராக இருந்ததால் தான் தற்போது அவரும் கட்சி தலைவராக உள்ளார்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் திமுக தலைமையிலான கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாக்கின் படி 100 ஆண்டுகள் ஆனாலும் அதிமுக எனும் இயக்கம் அழியாது.

ADVERTISEMENT

பல்வேறு சூழ்ச்சிகளால் சட்டசபையில் பெரும்பான்மையை நிருபிக்க வேண்டிய நிலை அதிமுகவுக்கு வந்தது. அப்போது திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவை என்று கூட பார்க்காமல் அராஜகத்தில் ஈடுபட்டதை மக்கள் இன்னும் மறக்கவில்லை. அப்படிப்பட்டவர்களா சட்டத்தை காப்பாற்றுவார்கள். எனவே மக்கள் சிந்திக்க வேண்டும்.

மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது. தற்போது தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களும் அதிமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படும். கரோனா காலச் சூழலில் இந்தியாவில் தமிழகத்தில் தான் தொழில் வளம் சிறப்பாக இருந்தது. அதுமட்டுமின்றி கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கப்பட்ட புதிய தொழிற்சாலைகள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

நமது மாநிலத்தைப் பொறுத்தவரை சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருப்பதால் தான் எண்ணற்ற தொழில் நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். அதுமட்டுமின்றி குடிமராமத்து திட்டத்தின் மூலம் வேளாண் பணிகளும் தொய்வின்றி நடைபெற்று வருகின்றன. 50 ஆண்டுகளுக்கு பின்னர் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள அணைகளில் கோடை காலம் தொடங்கிய பின்னரும் சுமார் 80 சதவீத நீர் இருப்பு உள்ளது.

இதுதவிர, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இப்பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் காவிரி,வைகை,குண்டாறு இணைப்பு திட்டம் விரைந்து நிறைவேற்றப்படும். இம்மாவட்டத்தில் ரூ.42 கோடி மதிப்பில் குடிமராமத்து பணிகள் நடைபெற்றுள்ளன. விடுதலை வீரர்களான மருது சகோதரர்களுக்கு திருவுருவச் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் புறவழிச்சாலை திட்டம் விரைந்து நிறைவேற்றப்படும்.

இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை மக்களுக்காக நிறைவேற்ற அதிமுக உறுதி பூண்டுள்ளது. திமுகவைப் பொறுத்தவரை குடும்பக் கட்சி, அக்கட்சி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு பாதுகாப்பு இருக்காது. இந்த தேர்தலோடு திமுக மூடு விழா காண வேண்டும்.

முதல்வராக ஆக வேண்டும் என்கிற ஸ்டாலின் கனவு பலிக்காது. இதுவரை அதிமுக ஆட்சியில் சாதி, மதச் சண்டைகள் இல்லை. சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. எனவே தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பொதுமக்கள் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.

முன்னதாக சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அதிமுக சார்பில் அத்தொகுதியில் போட்டியிடும் மருது. அழகுராஜூக்கு ஆதரவு கோரி முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அதன்பின், சிவகங்கையில் பிரசாரத்தை நிறைவு செய்த அவர் மானாமதுரையில் அத்தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.நாகராஜனுக்கு ஆதரவு கோரி தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT