தமிழ்நாடு

மக்கள் கேட்பதைச் செய்யும் அரசாக மோடி அரசு உள்ளது: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேச்சு

DIN

மக்கள் கேட்பதைச் செய்யும் அரசாக நரேந்திரமோடி அரசு உள்ளதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறினார்.

காரைக்கால் மாவட்டம், நிரவி - திருப்பட்டினம் தொகுதியில் பாஜக வேட்பாளர் வி.எம்.சி.எஸ்.மனோகரன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க மத்திய கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் மற்றும், நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் ஆகியோர் வெள்ளிக்கிழமை பிற்பகல் காரைக்கால் வந்தனர்.

திருப்பட்டினம் பகுதி கடலோர கிராமமான பட்டினச்சேரியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியது:

புதுச்சேரிக்கு அண்மையில் வந்த ராகுல்காந்தி, மத்தியில் மீன்வளத்துறையே இல்லை எனக் கூறினார். மக்களிடம் சென்று மத்தியில் மீன்வளத்துறை இருப்பதையும், தாம் மீன்வளத்துறை அமைச்சராகவும் உள்ளதையும் விளக்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டதன்பேரில் மீனவர்களை சந்திக்க வந்துள்ளேன். நாடாளுமன்றத்துக்கு ராகுல்காந்தி வருவதே இல்லை. வந்தால்தானே எந்த துறைக்கு அமைச்சர்கள் உள்ளனர் என்பது அவருக்குத் தெரியும்.

மத்தியில் காங்கிரஸ் அரசு 60 ஆண்டுக் காலம் மீனவர்களுக்குச் செய்ய முடியாததை, 6 ஆண்டுகளில் மோடி அரசு செய்துள்ளது. இதன் பயனாளிகளுக்கு அது நன்றாகவே தெரியும். புதுச்சேரியில் எங்கள் அரசு (பாஜக கூட்டணி) அமைந்தால், புதுச்சேரியை மீனவர் கேந்திரமாக மாற்றுவோம். 

 புதுச்சேரி, காரைக்காலில் 40 மீனவ கிராமங்கள் உள்ளன. மத்திய அரசு கடல் நண்பர்கள் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்திவருகிறது. இதன்படி புதுச்சேரி, காரைக்காலில் மீனவர்களுக்கு வேலைவாய்ப்பு மேம்படுத்தப்படும். இக்குழுவினர் வீடு தேடி வந்து மீனவர் மேம்பாட்டுக்கான திட்டங்களைச் சொல்லித் தருவார்கள்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து மீனவ கிராமங்களும் மாதிரி கிராமமாக மாற்றப்படும். மத்தியில் உள்ள மீனவர்களுக்கான அனைத்து நலத் திட்டங்களும் மீனவ குடும்பத்தினர் பயனடையும் சூழல் ஏற்படுத்தப்படும். மீன்பிடிப் படகுகளில் உயிரி கழிப்பறை வசதி ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு, மக்கள் கேட்பதைச் செய்யும் அரசாக உள்ளது. 

மத்திய அரசின் ஒவ்வொரு திட்டமும் மீனவர் வீட்டுக்கே வந்துசேர நடவடிக்கை எடுக்கப்படும். இது புதியது அல்ல என்றாலும், முந்தைய நாராயணசாமி அரசு, மத்திய அரசு தந்த நிதியை முறையாக மக்களுக்காகப் பயன்படுத்தவில்லை. மாறாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி பயனடைய அனுப்பிவிட்டார். புதுச்சேரியில் துறைமுக மேம்பாட்டுக்கு மத்திய அரசு நிதியளித்தது. அதற்கு அந்த நிதி பயன்படுத்தப்படவே இல்லை.

காரைக்கால் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பிரதமரிடம் பேசி இவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரி மீனவர்கள் பாஜகவை ஆதரிக்க முன்வரவேண்டும் என்றார் அவர்.

மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பேசினார். பாஜக மாநில துணைத் தலைவர் எம்.அருள்முருகன், மாவட்டத் தலைவர் துரைசேனாதிபதி, பாஜக வேட்பாளர் வி.எம்.சி.எஸ்.மனோகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT