தமிழ்நாடு

வடமாநிலத்தவரைத் தமிழகத்தில் திணிக்கப் பார்க்கிறார்கள்: ஸ்டாலின்

25th Mar 2021 04:08 PM

ADVERTISEMENT

வடமாநிலத்தவரைத் தமிழகத்தில் திணிக்கப் பார்க்கிறார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். 

திருவண்ணாமலையில் பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசியாவது, நாம் ஆட்சிக்கு வந்து விடக்கூட கூடாது என்று நினைக்கின்ற சிலர், ‘தி.மு.க. இந்துக்களுக்கு விரோதி’ என்று ஒரு பிரசாரத்தை தொடர்ந்து நடத்துவது உண்டு.

நான் பணிவோடு - உறுதியோடு சொல்ல விரும்புவது, யாருடைய நம்பிக்கைக்கும் இடையூறாக இருப்பது தி.மு.க. அல்ல. எனவே அமையவிருக்கும் என்னுடைய அரசும் அனைவர் உணர்வுக்கும் மதிப்பளிக்கும். எல்லோரையும் மதித்துத்தான் என்னுடைய ஆட்சி நடக்கும் என்ற உறுதியை நான் இந்தத் திருவண்ணாமலையில் நின்றுகொண்டு சொல்ல விரும்புகிறேன்.

மத உணர்வுகளைத் தூண்ட விரும்புவோர் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். இது தமிழ்நாடு. எங்கள் தமிழ் மக்கள் அரசியல் வேறு - ஆன்மீகம் வேறு என்று தெளிவு கொண்டவர்கள். இதை பா.ஜ.க. புரிந்துகொள்ள இன்னும் 100 ஆண்டுகள் ஆகும். அவர்கள் அறிவில்லாதவர்கள். அவர்கள் எதையும் யோசிக்க மாட்டார்கள் - சிந்திக்க மாட்டார்கள். அதனால்தான் இப்போதும் தமிழகத்தில் நடக்கின்ற தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலை இந்தியில் வெளியிட்டார்கள். அதாவது இந்தி பேசும் மக்களுக்கான ஆட்சிதான் அது.

ADVERTISEMENT

இந்தியைத் தமிழ்நாட்டில் திணிப்பது, இந்தி பேசும் இளைஞர்களை தமிழ்நாட்டில் வேலைக்குள் நுழைப்பது அதன் மூலமாக பா.ஜ.க.வை வளர்த்து விடலாம் என்று ஒரு சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு இங்கே இருக்கும் பழனிசாமி கும்பல் வேண்டுமானால் வேடிக்கை பார்க்கலாம்.

ஆனால் தி.மு.க.வோ, தமிழ்நாட்டு மக்களோ அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதை மட்டும் அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட்டுக் காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

தனிப்பட்ட எந்த மொழிக்கும் நாம் எதிரி இல்லை. இந்திக்கு என்றைக்கும் தி.மு.க. எதிரி அல்ல. ஆனால் இந்தியைத் திணிக்கக் கூடாது என்பதுதான் தி.மு.க.வின் கோரிக்கை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அதேபோல வடமாநிலத்தவரை நான் வெறுக்கவில்லை. அதே சமயத்தில் கல்வி வேலை வாய்ப்புகளை நம்முடைய தமிழர்களுக்குத்தான் தரவேண்டும் என்பதை அழுத்தந்திருத்தமாகக் கூறிக்கொண்டிருக்கிறோம். மற்ற மாநிலங்களுக்கு நாம் கூட்டமாக வேலைக்குச் செல்ல முடியுமா? முடியாது.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அந்த மாநில மக்களுக்குத்தான் முன்னுரிமை கொடுத்து கொண்டிருக்கிறது. அதே போல தமிழ்நாட்டில் இருக்கக்கூடாதா?

புதிய கல்விக் கொள்கை என்று சொல்லி குலக் கல்வியைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் இன்றைக்கு பா.ஜ.க. ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அதை இங்கே இருக்கும் அ.தி.மு.க. ஆட்சி தடுக்கவில்லை.

நீட் தேர்வினால் தமிழக மாணவர்களுக்கு இடம் குறைந்துவிட்டது. இப்போது மாநில அரசு தேர்வுகளையும் மத்திய அரசு பொதுத் தேர்வாக நடத்தும் என்று சொல்கிறார்கள். இது என்ன அநியாயம்.

வடமாநிலத்தவரைத் தமிழகத்தில் திணிக்கப் பார்க்கிறார்கள். ஐம்பது ஆண்டுகளாகப் பார்த்து பார்த்து உருவாக்கிய தமிழகத்தைச் சிதைக்க பார்க்கிறார்கள். தலைகொடுத்தாவது தமிழகத்தை நிச்சயமாக தி.மு.க. பாதுகாக்கும். நம்முடைய ஆட்சி பாதுகாக்கும் என்பதை நான் இந்த நேரத்தில் உறுதியோடு தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்தத் தேர்தல் மூலமாக நாம் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரவேண்டும் என்று சொல்கிறோம். அது பதவியில் உட்கார வேண்டும் என்பதற்காக அல்ல, அப்போதுதான் இதுபோன்ற அயோக்கியத்தனங்களைத் தடுக்க முடியும். நம்முடைய தமிழகத்தில் இருக்கும் இளைஞர்களின் எதிர்காலத்தைக் காப்பற்ற முடியும்.

நான் தேர்தலுக்கு முன்பே சொன்னேன். இந்தத் தேர்தலை வெறும் தேர்தலாக மட்டும் கருதாதீர்கள். நம்முடைய கொள்கையைக் காப்பாற்ற, நாம் கட்டி அமைத்திருக்கும் தமிழகத்தைக் காப்பாற்ற நடக்கின்ற போர். அந்தப் போரில் நாம் வெற்றி கண்டாக வேண்டும் என்பதுதான் நம்முடைய குறிக்கோளாக இருக்க வேண்டும்.

எந்த காரணத்தை கொண்டும், எந்த சூழ்நிலையிலும் பா.ஜ.க. வெற்றி பெறப்போவதில்லை. அதில் யாருக்கும் சந்தேகம் இருக்க வேண்டிய அவசியமில்லை.

அதே நேரத்தில் அ.தி.மு.க.வும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற்று வந்து விடக்கூடாது. ஏன் என்றால் ஒரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றி பெற்றால் கூட அவர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக அல்ல, பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக தான் இருப்பார்.

அதற்கு ஒரு உதாரணம், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 39 இடங்களில் போட்டியிட்டு 38 இடங்களில் நாம் வெற்றி பெற்றோம். தேனி தொகுதியில் மட்டும் ஓ.பி.எஸ். மகன் வெற்றி பெற்றார்.

அவர் வெற்றி பெற்று இன்றைக்கு அ.தி.மு.க. எம்.பி.யாக இல்லாமல் பாஜக எம்.பி.யாக இருக்கிறார். எம்.பி.க்கள் எப்போதும் அவர்களுடைய லெட்டர் பேடில் அவரவர் கட்சித் தலைவரின் படத்தைத்தான் போடுவார்கள். ஆனால் அவர் மோடியின் படத்தைப் போட்டிருக்கிறார். அதனால்தான் 234 இடங்களிலும் நாம் தான் வெற்றி பெற வேண்டும் என்று சொல்கிறேன்.

அது மட்டுமல்ல, ஈழத்தமிழர்களுக்கு இன்றைக்கு பா.ஜ.க. வும் – அ.தி.மு.க.வும் சேர்ந்து பல்வேறு வகைகளில் துரோகம் செய்து கொண்டிருக்கின்றனர். இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று நாம் கோரிக்கை வைத்தோம். நாம் கோரிக்கை வைத்தது மட்டுமல்ல, நானே பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேரும் பிரதமருக்குக் கடிதம் எழுதி இருக்கிறார்கள்.

ஐ.நா. சபையில் நடக்கும் கூட்டத்தில் அந்தத் தீர்மானத்தை நீங்கள் எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று பிரதமருக்குக் கடிதம் அனுப்பி வைத்தோம். ஆனால் அந்தக் கூட்டத்திலிருந்து இந்தியா வெளிநடப்பு செய்து விட்டது என்றார்.

Tags : DMK
ADVERTISEMENT
ADVERTISEMENT