தமிழ்நாடு

புதுச்சேரி அரசின் 10% இடஒதுக்கீடு நிராகரிப்பு: கே. பாலகிருஷ்ணன் கண்டனம்

25th Mar 2021 07:01 PM

ADVERTISEMENT

மருத்துவப் படிப்பில் புதுச்சேரி அரசு கொண்டுவந்த 10 சதவிகித இடஒதுக்கீட்டை நிராகரித்த மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச்செயலர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், மருத்துவக் கல்வியில் நீட் தேர்வை மத்திய அரசு கட்டாயப்படுத்தியுள்ளது. இதனால் பாதிக்கப்படும் அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசு 7.5 சதவிகிதமான இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் நிறைவேற்றியது.

இதேபோன்று புதுச்சேரி அரசு, அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 10 சதமான இடஒதுக்கீட்டினை வழங்கி தீர்மானம் நிறைவேற்றியது. இத்தீர்மானத்திற்கு அப்போதைய துணை நிலை ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் 10 சதமான இடஒதுக்கீட்டை புதுச்சேரியில் அமலாக்க வேண்டுமென ஒரு மாணவி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இவ்வழக்கில் மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், மருத்துவ கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது சட்ட விரோதம் எனவும், இதனால் திறமையான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும் இத்தகைய இட ஒதுக்கீடு நீட் தேர்வு அடிப்படைக்கே விரோதமானது என்பதால் இந்த இடஒதுக்கீட்டை நிராகரிக்கிறோம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

தமிழகத்திலும் நீட் தேர்வு அமலாகியுள்ள நிலையில் தமிழக அரசு, அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதமான இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டு அமலாகி வருகிறது. இது தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன. மத்திய அரசு, புதுச்சேரி வழக்கில் மேற்கொண்ட அதே அணுகுமுறையினையே இவ்வழக்கிலும் மேற்கொள்ள வாய்ப்புள்ளதால், தமிழக அரசு நிறைவேற்றியுள்ள 7.5 சதவிகித இடஒதுக்கீடு பறிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அணுகுமுறை வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.

மருத்துவப் படிப்பில் ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட மற்றும் பின்தங்கிய வகுப்புகளைச் சார்ந்த மாணவ, மாணவியர்களின் கல்வி உரிமையை தட்டிப்பறிக்கும் அணுகுமுறையை மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வருவது கொடுமையானதாகும். சமூக நீதி கோட்பாட்டிற்கும் முழு விரோதமானதாகும்.

இத்தகைய கொள்கை கொண்டுள்ள பாஜகவுடன், அதிமுக கூட்டணி சேர்ந்துள்ளது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும். இக்கூட்டணிக்கு தமிழக, புதுச்சேரி வாக்காளர்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள் என்பது திண்ணம்.

நீட் தேர்வு இல்லாத தமிழகத்தை உருவாக்க அனைவரும் போராட முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

Tags : kBalakrishnan
ADVERTISEMENT
ADVERTISEMENT