சென்னையில் கரோனா விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் கடைகள், தனியார் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு சென்னை மாநகராட்சி தரப்பில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது:
சென்னையில் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத கடைகள், வணிக வளாகங்கள், காய்கறி அங்காடிகள், தனியார் நிறுவனங்கள் மீது தொற்று நோய்கள் சட்டம் 1897 பிரிவு 2-ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனை செய்யவும், சானிடைசர் கொண்டு சுத்தம் செய்த பின்னரே பணியாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்வதை உறுதி செய்துகொள்ளவும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தவும் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.