தமிழ்நாடு

திமுகவில் இணைந்த லால்குடி சமக வேட்பாளர்

22nd Mar 2021 03:42 PM

ADVERTISEMENT

 

திருச்சி மாவட்டம், லால்குடி சட்டப் பேரவை தொகுதியில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர் (மநீம கூட்டணி) முரளி கிருஷ்ணன், திமுக முதன்மைச் செயலர் கே.என். நேரு முன்னிலையில், திங்கள்கிழமை பிற்பகல் திமுக-வில் இணைந்தார்.

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன. இதில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் 5 தொகுதிக்கு அதன் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 4 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளான இந்திய ஜனநாயக கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவற்றுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில், அக்கட்சியின் பொதுச் செயலர் எம். முருகானந்தம் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். தொழில் முனைவோர் அணி மாநிலச் செயலர் டி. வீரசக்தி, திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். மண்ணச்சநல்லூரில் ஆர். சாம்சன், முசிறியில் எஸ். கோகுல், துறையூர் (தனி) தொகுதியில் த.ந. யுவராஜன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ADVERTISEMENT

இவர்களைத் தவிர, கூட்டணி சார்பில் திருவரங்கத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் எஸ். பிரான்சிஸ் மேரி, திருச்சி மேற்கு தொகுதியில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் எம். அபுபக்கர் சித்திக், லால்குடியில் சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர் முரளி கிருஷ்ணன், மணப்பாறையில் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கே. உமராணி ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

இவர்களில், லால்குடி தொகுதியில் போட்டியிடும் முரளி கிருஷ்ணன் திங்கள்கிழமை பிற்பகல் திமுக-வில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமத்துவ மக்கள் கட்சியின் திருச்சி மாவட்டச் செயலராக இருந்த இவர், லால்குடி தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், திருச்சியில் உள்ள திமுக முதன்மைச் செயலர் அலுவலகத்துக்கு, திங்கள்கிழமை பிற்பகல் வந்த அவர்,கே.என். நேரு முன்னிலையில் திமுக-வில் தன்னை இணைத்துக்கொண்டார். 

இந்த நிகழ்வில், திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, லால்குடி தொகுதி திமுக வேட்பாளர் செளந்தரபாண்டியன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, ஒன்றிய செயலர் கதிர்வேல் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : திமுக
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT