தமிழ்நாடு

இலவசத் திட்டங்களால் ஏழ்மையை ஒழித்துவிட முடியாது: கமல்ஹாசன்

22nd Mar 2021 05:01 PM

ADVERTISEMENT


 
இலவசத் திட்டங்களால் ஒருபோதும் ஏழ்மையை ஒழித்துவிட முடியாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். 

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திங்கள்கிழமை ஹெலிகாப்டர் மூலம் நாகை மாவட்டம் திருப்பூண்டிக்கு வந்தார். தொடர்ந்து, கீழ்வேளூர் சட்டப்பேரவைத்தொகுதி வேட்பாளர் ஜி.சித்துவுக்கு வாக்குக்கேட்டு, தொகுதிக்குள்பட்ட திருப்பூண்டி மூலக்கடை பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். 

அப்போது அவர் மேலும் பேசியது    

தமிழக மக்களின் வாழ்வாதாரத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. எந்த ஊரிலும்  புறவழிச்சாலை இல்லை. போக்குவரத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. தமிழகத்தில்  உள்ள பல்வேறு  ஊர்களில் திறந்து வெளி சாக்கடையே காணப்படுகிறது. இந்நிலையில் மக்களின் மண், மொழி, மக்கள் நலன் காக்கவே நாங்கள்  அரசியலுக்கு வந்துள்ளோம். பணம் மற்றும் புகழைப் பெறுவதற்காக அரசியலுக்கு வரவில்லை.  

ADVERTISEMENT

என்னை வாழவைத்த மக்களும் வளமான வாழ்வைப் பெறவேண்டும் என்பதற்காகவும், முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லவே அரசியலுக்கு வந்துள்ளேன். நீங்கள் எனக்குக் கொடுத்த, எனதுசொந்தப் பணத்தில் உங்களைச் சந்திக்க வந்துள்ளேன். நேர்மையானவர்கள் தவறுசெய்யமாட்டார்கள். தவறு செய்பவர்களை தட்டிக்கேட்கும் நேர்மையான தலைமை தேவை. அது எங்களிடம் உள்ளது. காவல்துறை ஏவல்துறை ஆகிவிட்டது. அதனால் அரசியல்வாதிகளின் தவற்றை அவர்களால்  தட்டிக்கேட்க முடியவில்லை.

வழிபாட்டுத்தலங்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள், எதிர்கால தலைமுறையினருக்குப் பாதுகாப்பாக விட்டுச்செல்லவேண்டிய மண் வளம் மற்றும் நீர்வளம் சூறையாடப்படும் போதும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். நாம் வாழும் பூமியை வணங்க வேண்டும்.

எதிரிகள் கூட காப்பியடிக்கும் அற்புதத் திட்டங்களை மக்கள் நீதி மய்யம் தீட்டிவைத்துள்ளது. உழைப்புக்கு ஏற்ற வகையில் ஊதியம் வழங்கப்படவேண்டும். இல்லத்தரசிகளுக்கும், விவசாயிகளும் முன்னேற்றமடைவதற்கான திட்டங்கள்  உள்ளன. எதுவும் எளிதாகக் கிடைத்துவிடாது. தமிழகத்தில் இலவசங்கள் மட்டும்  எளிதாகக் கிடைக்கும். அதிமுகவும், திமுகவும் மாறி மாறி இலவசத் திட்டங்களை அறிவித்து வருகின்றன. இலவசங்கள்  ஒருபோதும் ஏழ்மை நிலையை ஒழித்து விடாது. உங்கள் பையில்  உள்ள பணத்தை எடுத்து கையில் கொடுப்பது மிகவும் எளிதானது. உழைப்பால் கிடைப்பவை மட்டும் என்றும் நிலைத்திருக்கும்.

நாட்டில் மாற்றம் வேண்டும். அதற்கு  மக்கள் நீதி  மய்யத்துக்கு வாக்களியுங்கள். மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளும், உறுப்பினர்களும் மக்களுக்கு சேவை செய்தவர்கள். அதனால்  அவர்களுக்கு  வாக்களியுங்கள். எனக்கு சாதியுமில்லை, மதமும் இல்லை. 

மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் உள்ள 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும், இல்லத்தரசிகள், கணவனால் கைவிடப்பட்டவர்களின் வாழ்வாதார முன்னேற்றத்துக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஏழ்மை முழுவதுமாக விலக்கி வைக்கப்பட்டும், வறுமைக்கோடு என்பதே இருக்காது, தமிழக மீனவர்கள் எவ்வித அச்சமின்றி ஆழ்கடல் மீன்பிடிப்பைச் செய்ய முடியும். அதற்கு உரியப் பாதுகாப்பு அளிக்கப்படும். நேர்மையானவர்களுக்கு நீங்கள் அளிக்கும் வாக்குகள் மூலம், நிற்கும் இடமெல்லாம் நேர்மையானவர்களின்  கூடாரமாக மாறும். அதை உருவாக்குவதுதான்  நமது இலக்கு என்றார் கமல்ஹாசன்.

இதையடுத்து நாகை சட்டப்பேரவைத்தொகுதி மக்கள் நீதி மய்யம்  வேட்பாளர்  எம் .செய்யது அனஸþக்கு வாக்குக் கேட்டு நாகை  அபிராமி அம்மன் திடலில் கமல் ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார்.

Tags : கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் திருப்பூண்டி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT