பேரவைத் தேர்தலில் இறுதியாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் திங்கள்கிழமை மாலை வெளியிடப்பட்டது. அதன்படி, வேலூர் மாவட்டத்திலுள்ள 5 பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 70 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி வேட்புமனுத் தாக்கல் கடந்த 12ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம் (தனி), கே.வி.குப்பம் (தனி) ஆகிய 5 தொகுதிகளில் மொத்தம் 116 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவற்றின் மீது சனிக்கிழமை நடைபெற்ற பரிசீலனையில் 33 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 83 மனுக்கள் ஏற்கப்பட்டன. தொடர்ந்து வேட்புமனுக்கள் வாபஸ் பெற திங்கள்கிழமை மாலை 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
அப்போது, கே.வி.குப்பம் தொகுதி தவிர காட்பாடி தொகுதியில் 2 பேரும், வேலூர் தொகுதியில் 3 பேரும், அணைக்கட்டு தொகுதியில் 2 பேரும், குடியாத்தம் தொகுதியில் 6 பேரும் என மொத்தம் 13 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். தொடர்ந்து இறுதியாக தேர்தல் களத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனடிப்படையில், வேலூர் மாவட்டத்தில் தொகுதி வாரியாக காட்பாடியில் 15, வேலூரில் 17, அணைக்கட்டில் 13, கே.வி.குப்பத்தில் 10, குடியாத்தத்தில் 15 என 5 பேரவை தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 70 போட்டியிடுகின்றனர்.