தமிழ்நாடு

அதிமுக அரசால் பேரழிவை நோக்கி குறு, சிறு, நடுத்தர தொழில்கள்: கே.எஸ்.அழகிரி

22nd Mar 2021 01:29 PM

ADVERTISEMENT

அ.தி.மு.க. அரசால் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் பேரழிவை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், மத்திய பா.ஜ.க. அரசு மற்றும் மாநிலத்தில் ஆளும் அ.தி.மு.க. அரசு ஆகியவற்றின் தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாக குறு, சிறு, நடுத்தர தொழில்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி, கடும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. குறிப்பாக, கரோனா தொற்று காலத்திலும், அதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளாலும் கடுமையான பாதிப்பை இத்துறை எதிர்கொண்டு வருகிறது. இதுகுறித்து மத்திய - மாநில ஆட்சியாளர்கள் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதைத் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். ஆனால், அ.தி.மு.க.வோ, பா.ஜ.க. வோ தங்கள் தேர்தல் அறிக்கைகளில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை முற்றிலும் புறக்கணித்துள்ளதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும், தங்கள் பிரச்னைகளுக்கு முடிவு ஏற்படும் என்ற நம்பிக்கை குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இப்போது ஏற்பட்டிருப்பதைக் காண முடிகிறது. அந்த அளவுக்கு அவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திமுக - காங்கிரஸ் கூட்டணி திகழ்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. வரும் மே மாதம் 6 ஆம் தேதிக்குப் பிறகு, நிலைமை மாறும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய பா.ஜ.க. அரசின் ஆட்சி முறையை அப்படியே ஏற்றுக் கொண்டு பின்பற்றி வருகிற அ.தி.மு.க. அரசால் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் பேரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இந்த பேரழிவிலிருந்து குறு, சிறு, நடுத்தர தொழில்களை பாதுகாக்க தெளிவான தொழில் கொள்கையை கடைப்பிடிக்கிற ஒரு ஆட்சி தமிழகத்தில் ஏற்பட வேண்டும். அத்தகைய ஆட்சி மாற்றத்தை தமிழக வாக்காளர்கள் வருகிற சட்டமன்றத் தேர்தலில் ஏற்படுத்துவதன் மூலமே தமிழகத்தில் குறு, சிறு, நடுத்தர தொழில்களை பாதுகாக்க முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

ADVERTISEMENT

Tags : congress
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT