திண்டுக்கல் மாவட்டத்தில் 16 மனுக்கள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், 7 தொகுதிகளில் 132 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில், பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், வேடசந்தூர் ஆகிய 7 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கான வேட்பு மனுத் தாக்கால் கடந்த வெள்ளிக்கிழமை(மார்ச் 19) பிற்பகல் 3 மணிக்கு நிறைவடைந்தது. அதன்படி, 7 தொகுதிக்கும் மொத்தம் 186 வேட்பாளர்கள் சார்பில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், வேட்பு மனு பரிசீலனை அந்தந்த தொகுதியிலுள்ள தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அதில், 148 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
பழனியில் அதிகபட்ச போட்டி:
அதன் தொடர்ச்சியாக வேட்பு மனு வாபஸ் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில், பழனி தொகுதியில் 5, ஒட்டன்சத்திரத்தில் 6, நத்தத்தில் 3, திண்டுக்கல்லில் 2 என மொத்தம் 16 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. ஆத்தூர், நிலக்கோட்டை மற்றும் வேடசந்தூர் தொகுதிகளில் மனுக்கள் வாபஸ் பெறப்படவில்லை. பழனியில் 24 வேட்பாளர்கள், ஒட்டன்சத்திரத்தில் 14, ஆத்தூரில் 20, நிலக்கோட்டையில் 18, நத்தத்தில் 15, திண்டுக்கல்லில் 21, வேடசந்தூரில் 20 என மொத்தம் 132 வேட்பாளர்கள் களம் இறங்குவது உறுதியாகியுள்ளது.
பழனி தொகுதியில் அதிகபட்சமாக 24 வேட்பாளர்களும், ஒட்டன்சத்திரத்தில் குறைந்தபட்சமாக 14 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.