தமிழ்நாடு

மகளிருக்கு குறைவான அளவில் வாய்ப்பு வழங்கிய திராவிடக் கட்சிகள்

22nd Mar 2021 08:28 AM

ADVERTISEMENT

தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதி அளவுக்கு பெண்கள் இருந்தாலும் மக்களால் தேர்வு செய்யப்படும் பதவிகளில் அவர்களுக்கு சொற்ப அளவிலே வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
 தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு வழங்கப்பட்டு வந்த 33 சதவீத இட ஒதுக்கீடு கடந்த 2019 ஆம் ஆண்டில் 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதன்படி 2019 டிசம்பரில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவீத பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
 தமிழகத்தில் உள்ளாட்சிகள் அளவில் 50 சதவீத இட ஒதுக்கீடு அமலில் இருந்தாலும், மக்களவை, நாட்டில் உள்ள பல்வேறு மாநில சட்டப் பேரவைகளில் 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான சட்ட மசோதா நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது.
 தமிழகத்தில்தான் நாட்டிலேயே முதல் முறையாக பெண் ஒருவர் சட்டப்பேரவை உறுப்பினரானார். 1927- இல் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அப்போதைய மெட்ராஸ் சட்ட மேலவைக்கு நியமன உறுப்பினரானார். இதைத் தொடர்ந்து 1934-இல் மக்களால் தேர்வு செய்யப்பட்டு பேரவை உறுப்பினரானார் சுதந்திரப் போராட்ட வீராங்கனை ருக்மிணி லட்சுமிபதி.
 பின்னாளில் இவர் பேரவைத் துணைத் தலைவர், மெட்ராஸ் மாகாணத்தின் முதல் பெண் அமைச்சர் என்ற பெருமையையும் பெற்றார். அதன் பிறகு ராஜாஜி, காமராஜர் அமைச்சரவையில் ஜோதி வெங்கடாசலம், காமராஜர் அமைச்சரவையில் லூர்தம்மாள் சைமன், அண்ணாவின் அமைச்சரவையில் சத்தியவாணி முத்து என அடுத்தடுத்து அமைச்சரவையில் இடம் பிடிக்கும் அளவுக்கு பெண்கள் உயர்ந்தனர்.
 இதையடுத்து முதல்வராக ஜெயலலிதா 1991-இல் பதவியேற்றார். இவரது வருகைக்கு பிறகே தமிழக சட்டப் பேரவையில் இரட்டை இலக்கத்தில் பெண்கள் இடம்பெற ஆரம்பித்தனர். 1991 தேர்தல் வரையிலும் அரசியல் கட்சிகள் சார்பில் வாய்ப்பு அளிக்கப்படும் பெண்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையும் மூன்று இலக்கத்தைத் தொடவில்லை. அந்தத் தேர்தலில்தான் முதல் முறையாக அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பில் மொத்தம் 102 பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். அதில் 32 பேர் வெற்றி பெற்று பேரவைக்குள் நுழைந்தனர். இப்போது வரையிலும் இதுதான் அதிகபட்ச எண்ணிக்கையாக இருக்கிறது. கடந்த 1971 தேர்தலில் 15 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தாலும் ஒருவரும் வெற்றி பெறவில்லை. அதேபோல் கடந்த 2016 தேர்தலில் அதிகபட்சமாக 320 பெண்கள் களத்தில் இருந்தனர். அவர்களில் 21 பேர் வெற்றி பெற்று பேரவைக்குள் நுழைந்தனர்.
 இந்தத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள இரு பெரும் திராவிடக் கட்சிகளும் குறைந்த எண்ணிக்கையிலான பெண்களையே வேட்பாளர்களாக அறிவித்துள்ளனர். அதிமுகவில் 14 பெண்களும், திமுகவில் 11 பெண்களும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கடந்த தேர்தலில் அதிமுகவில் 31 பெண்களும், திமுகவில் 19 பெண்களும் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டிருந்தனர். கோவை மண்டலத்தைப் பொருத்தவரை அதிமுக சார்பில் எந்தத் தொகுதியிலும் பெண் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. அதேநேரம் கூட்டணிக் கட்சியான பாஜக சார்பில் கோவை தெற்குத் தொகுதியில் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். அதேபோல் மொடக்குறிச்சி தொகுதியில் சி.கே.சரஸ்வதி போட்டியிடுகிறார்.
 திமுகவைப் பொருத்தவரை மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி) தொகுதிகளில் முறையே சுப்புலட்சுமி ஜெகதீசன், என்.கயல்விழி ஆகியோர் போட்டியிடுகின்றனர். வழக்கமாக நாம் தமிழர் கட்சி பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும். அதன்படி இந்த ஆண்டும் 117 பெண் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் 29 தொகுதிகள் இருக்கும் நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் 15 பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டிருக்கின்றனர்.
 -க.தங்கராஜா

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT