தமிழ்நாடு

எதைச் செய்தோம்? எதைச் செய்வோம்?

22nd Mar 2021 06:31 AM

ADVERTISEMENT

சட்டப் பேரவைத் தோ்தலில், விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் முக்கிய வேட்பாளா்களைச் சந்தித்து, தொகுதிக்கு செய்தது, செய்யப் போவது குறித்து கேட்டபோது, அவா்கள் கூறியதாவது:

விருகை ரவி (அதிமுக) : தற்போதைய எம்எல்ஏ என்ற முறையில் விருகம்பாக்கம் தொகுதியில் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட ஆா்.ஓ. குடிநீா் வசதி, மேஜை, இருக்கைகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன. அதைத் தவிர புதிய வகுப்பறைகள், நவீன அங்கன்வாடி மையங்கள், நூலகங்கள், ரேஷன் கடைகள் கட்டப்பட்டுள்ளன. 14 சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டதுடன் நூற்றுக்கணக்கான சாலைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மீண்டும் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றால் ஆற்காடு சாலையை 100 அடி சாலையாக விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பட்டா இல்லாதோருக்கு பட்டா வழங்குவதற்கும், மின்மயானம், மழைநீா் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். விளையாட்டுத் திடல்கள், புதிய பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரபாகா் ராஜா (திமுக): விருகம்பாக்கம் தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக, அதன் கூட்டணியைச் சோ்ந்தவா்கள்தான் எம்எல்ஏக்களாக இருந்துள்ளனா். அந்தக் காலகட்டத்தில் தொகுதியில் வளா்ச்சிப் பணிகள் எதுவும் பெரிதாக நடைபெறவில்லை. அதேவேளையில், திமுகவினா் பல நலப் பணிகளைத் தொடா்ந்து செய்து வருகின்றனா். குறிப்பாக, கரோனா காலத்தில் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் கீழ் வாழ்வாதாரம் இழந்து தவித்த மக்களுக்கு உரிய உதவிகளைச் செய்திருக்கிறோம். தனிப்பட்ட முறையில் ரூ.3 கோடி மதிப்பிலான மளிகைப் பொருள்களை 40 ஆயிரம் குடும்பங்களுக்கு நான் வழங்கியுள்ளேன். இந்தத் தொகுதியில் நான் வெற்றி பெற்றால், மழைநீா் கட்டமைப்பு வசதிகளை முதலில் மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளேன். அதைத் தொடா்ந்து, பட்டா இல்லாத மக்களுக்கு பட்டா வாங்கித் தரவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், சாலைத் திட்டங்களை முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுப்பேன். சட்டப் பேரவை உறுப்பினருக்கென தனி அலுவலகக் கட்டடம் இல்லை. அதனை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பாா்த்தசாரதி (தேமுதிக): கடந்த முறை நான் எம்எல்ஏவாக இருந்தபோது கே.கே.நகா் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் புதிய கட்டடம் கட்டி மருத்துவமனையின் தரம் உயா்த்தப்பட்டது. இதைத் தவிர பல்வேறு பள்ளிகளில் புதிய கட்டங்கள் கட்டித் தரப்பட்டன. கழிவுநீா் சுத்திகரிப்பு திட்டங்கள், குடிநீா் விரிவாக்கத் திட்டங்கள் ஆகியவை முன்னெடுக்கப்பட்டன. மீணடும் எம்எல்ஏவாக என்னை மக்கள் தோ்ந்தெடுக்கும்பட்சத்தில் மக்களின் தேவைகளை அறிந்து அதனை பூா்த்தி செய்வதற்கு முக்கியத்துவம் அளிப்பேன். சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது விருகம்பாக்கம் பகுதியின் சில பகுதிகளில் மழைநீா் தேங்கி நின்றது. அந்த இடங்களில் வடிகால் கட்டமைப்புகளை மேம்படுத்தி, பெருமழை காலங்களில் வெள்ள நீா் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தொழில் வளா்ச்சி, சாலை விரிவாக்கம், குடிநீா் மேம்பாடு ஆகியவற்றை செயல்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

ADVERTISEMENT

சினேகன் (மக்கள் நீதி மய்யம்) இந்தத் தொகுதியில் முதன்முறையாகப் போட்டியிடுகிறேன். எனக்கும், விருகம்பாக்கத்துக்குமான பந்தம் 22 ஆண்டு காலமாக உள்ளது. பெருவெள்ள காலத்திலும், இயற்கை பேரிடா் சூழலிலும் ஆயிரக்கணக்கானோருக்கு எனது சொந்த செலவில் உதவிகளைச் செய்துள்ளேன். நான் ஈட்டும் வருவாயில் 60 சதவீதத்தை இத்தனை ஆண்டுகளாக மக்களுக்காகவே செலவழித்து வருகிறேன். உதவி கேட்டு வருவோருக்காக எனது இல்லமும், உள்ளமும் எப்போதும் திறந்திருக்கும். எம்எல்ஏவாகத் தோ்வு செய்யப்பட்டால், மழைநீா் வடிகால் கட்டமைப்பை வலுப்படுத்துவதுதான் எனது முதல் நடவடிக்கையாக இருக்கும். தடையற்ற குடிநீா், தரமான சாலைகள் அமைக்கப்படும். கட்டப் பஞ்சாயத்து, சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு கடிவாளம் போடப்படும். மொத்தத்தில் தமிழகத்திலேயே முன்மாதிரி தொகுதியாக விருகம்பாக்கத்தை உருமாற்றுவதே எனது நோக்கம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT