தமிழ்நாடு

முகக் கவசம் அணியாதோருக்கு அபராதம்: மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் மீண்டும் அறிவுறுத்தல்

17th Mar 2021 04:13 AM

ADVERTISEMENT

கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க முகக் கவசம் அணியாதோருக்கு அபராதம் விதிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார்.
 கரோனா நோய்த் தொற்று அதிகரிப்பதை தடுக்க, தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வழியாக அவர் ஆலோசித்தார். இக்கூட்டம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி:
 தமிழகத்தில் கடந்த 10 நாள்களாக கரோனா நோய்த் தொற்று படிப்படியாக உயர்ந்து வருகிறது. சென்னை, கோயம்புத்தூர் மாவட்டங்களில் 2 சதவீதத்துக்கு சற்று மேலாகவும், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 1 சதவீதத்துக்கு மேலாகவும் நோய்த் தொற்று விகிதம் உள்ளது. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சுமார் 65 ஆயிரம் பரிசோதனைகளில் உறுதி செய்யப்படும் நோய்த் தொற்று எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, நாளொன்றுக்கு 800 பேரைத் தாண்டியுள்ளது.
 முகக் கவசம் அணிவதை மீறுவோர் மீது பொது சுகாதார சட்டத்தின்கீழ் அபராதம் விதிக்க வேண்டும். பொது இடங்களுக்கென ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டி நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
 வங்கிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள், திருமண மண்டபங்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துதல், பொது குழாய் அமைந்துள்ள இடம், பொது கழிப்பிடம் போன்ற இடங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.
 கரோனா நோய்த் தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தி பரிசோதனை மாதிரிகள் எடுக்க வேண்டும். தொற்று உள்ளவர்களுக்கு உரிய நேரத்தில் தாமதமின்றி உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும்.
 காய்ச்சல் முகாம்கள்: காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்தி, நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து, தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். நோய்த் தொற்று உள்ள இடங்களில் தொற்றைத் தடுக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தி கிருமி நாசினி தெளிக்க வேண்டும். தகுதி வாய்ந்த நபர்களுக்கு தடுப்பூசி செலுத்திட நடவடிககை எடுக்க வேண்டும்.
 வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களை கடந்த ஆண்டைப் போன்றே கண்காணிக்க வேண்டும். மாநிலத்தில் தேர்தல் நடத்துவதற்கான பணிகளின் முக்கிய பங்காக கரோனா தடுப்புப் பணிகளுக்கு முழுமையாக முக்கியத்துவம் அளித்து நோய்த் தொற்றை குறைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் கேட்டுக் கொண்டார்.
 வாக்குப் பதிவு நாளில் பொது விடுமுறை
 வாக்குப் பதிவு தினத்தன்று பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு:
 தமிழக சட்டப் பேரவைக்கு பொதுத் தேர்தலும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு இடைத் தேர்தலும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குப் பதிவு தினமான அன்றைய தினத்தில் தமிழகத்தில் பொது விடுமுறை விடப்படுகிறது என தனது உத்தரவில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
 பிரசார கூட்டங்களிலும் முகக் கவசம் கட்டாயம்
 மக்கள் அதிகமாகக் கூடும் தேர்தல் பிரசார கூட்டங்கள், கலாசார, வழிபாடு மற்றும் இதர கூட்டங்களில் பங்கேற்கும் பொது மக்கள் முகக் கவசத்தை கண்டிப்பாக அணிய வேண்டும். இக்கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் போது முகக் கவசம் அணிவது போன்ற நிபந்தனைகளை விதித்து அனுமதி வழங்கிட வேண்டும். அதனை சம்பந்தப்பட்ட துறைகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 நோய்த்தொற்று பரவ காரணங்கள் என்ன?
 முகக் கவசமின்றி நிகழ்வுகளில் பங்கேற்பதாலும், அரசால் வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றாத காரணத்தாலும் நோய்த் தொற்று பரவுகிறது.
 நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில், நோய்த் தொற்று அறிகுறிகள் இல்லாமலோ அல்லது மிகக் குறைவான பாதிப்புடன் வீட்டு தனிமைக்கான அனுமதியை மருத்துவரிடம் பலரும் பெறுகின்றனர். அவ்வாறு பெறும் போது, உரிய வழிகாட்டி நெறிமுறைகளை அவர்கள் பின்பற்றுவதில்லை. இதனால், வீட்டிலுள்ள மற்றவர்களுக்கும், சுற்றியுள்ளோருக்கும் நோய்த் தொற்று பரவும் நிகழ்வுகள் காணப்படுகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT