தமிழ்நாடு

முதல்வர் வேட்பாளர் டிடிவி தினகரன்: பிரேமலதா விஜயகாந்த்

16th Mar 2021 06:29 AM

ADVERTISEMENT


சென்னை: அமமுக தலைமையிலான கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் டிடிவி தினகரன் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பிரேமலதா திங்கள்கிழமை கூறியது: அமமுக கூட்டணியில் 60 தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மூலமாக அதிமுகவுடன் கூட்டணி உருவானது. அந்தத் தேர்தலில் இறுதி நேரத்தில் எங்களுக்கு விருப்பம் இல்லாத  4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இந்தத் தேர்தலில் அந்த நிலைமை தேமுதிகவுக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதலே கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடங்குமாறு அதிமுகவை வலியுறுத்தி வந்தோம். ஆனால், எங்களை அழைப்பதற்குப் பதிலாக பாமக, பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இறுதியாக எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி 12 தொகுதிகளுக்கு மேல் கொடுக்க முடியாது எனத் தெரிவித்தார். ஆனால், நாங்கள் 18 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினரும் கேட்டோம்.  அதற்கு சம்மதிக்காத முதல்வர் எடப்பாடி பழனிசாமி 13 தொகுதிகள் மட்டுமே தர முடியும். நீங்கள் விரும்பும் முடிவை எடுத்துக் கொள்ளலாம் என கட்சியின் துணைப் பொதுச் செயலர் சுதீஷிடம்  கூறிவிட்டார்.  

ADVERTISEMENT

அதிமுகவுடன் கூட்டணி முறிவு ஏன்? அந்த 13 தொகுதிகளாவது நாங்கள் விரும்பும் தொகுதிகளாக இருக்க வேண்டும் என்று கேட்டோம். அதற்கு முதலில் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுங்கள்; பிறகு பார்த்துக் கொள்ளலாம் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.  கூட்டணியில் எந்தவித குழப்பமும் தேமுதிகவால் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக பொறுமை காத்தும் பயனில்லை என்பதால் அதிமுகவுடனான உறவை முறித்துக் கொண்டோம். 

கடந்த 2011பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக முதன்முதலாக கூட்டணி அமைத்து போட்டியிட்டது.  அந்தத் தேர்தலில் கூட்டணி தொடர்பாக பிரச்னை ஏற்பட்டபோது தனது பிரசாரப் பயணத்தை ரத்து செய்ததுடன் விஜயகாந்துடன் பேச்சுவார்த்தை நடத்தி 41 தொகுதிகளை தேமுதிகவுக்கு ஜெயலலிதா ஒதுக்கினார். தற்போது அமைத்துள்ள அமமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும். எங்கள் கூட்டணி முதல்வர் வேட்பாளர் டிடிவி தினகரன் என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT