தமிழ்நாடு

பேரவைத் தேர்தல் முடிவுகள் பதில் அளிக்கும்: முதல்வர் பழனிசாமி 

16th Mar 2021 06:50 AM

ADVERTISEMENT


எடப்பாடி: அதிமுக தேர்தல் அறிக்கை குறித்து விமர்சனம் செய்வோருக்கு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பதில் அளிக்கும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

எடப்பாடி தொகுதியில் போட்டியிட எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த பிறகு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

1989-இல் எடப்பாடி தொகுதியில் போட்டியிட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாய்ப்பளித்தார். அதன் பிறகு நான் தொடர்ந்து சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு இத்தொகுதி ஏற்றம் பெறவும், தொகுதி மக்கள் பல்வேறு  நன்மைகள் பெறுவதற்காகவும் அரும் பாடுபட்டுள்ளேன்.

இலவச சமையல் எரிவாயு உருளைகள் குறித்து...: அதிமுக தேர்தல் அறிக்கையில் குடும்ப அட்டைக்கு ஆண்டுக்கு இலவசமாக ஆறு சமையல் எரிவாயு உருளைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது; இந்த அறிவிப்பை செயல்படுத்துவது கடினம்  எனக் கூறுகின்றனர். இதற்கான பதில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும்.

ADVERTISEMENT

மிகவும் மகத்தானது: அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை மிகவும் மகத்தானது. இந்தத் தேர்தல் அறிக்கையை அனைத்துத் தரப்பு மக்களும் குறிப்பாக விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். 

குடியுரிமை திருத்தச் சட்டத்தை...:  கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து, மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டதால் மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது. 

குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்துவோம் என ஏற்கெனவே தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக அரசு இருக்கும். 

மக்களின் கோரிக்கைகள்: எடப்பாடி தொகுதியில் பொது மக்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. 19 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.  இந்த 19 வழித்தடத்திலும் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

அமோக வெற்றி உறுதி: இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் கடன் சுமை உள்ளது. அவ்வாறு இருந்தும் மாநிலங்களின் வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுதான் வருகின்றன. அதிமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி  என்பதால் அமோக வெற்றி பெறும் என்றார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

அதிமுக தேர்தல் அலுவலகத்தை...: முன்னதாக எடப்பாடி பேருந்து நிலையம் அருகே சேலம் பிரதான சாலையில் அமைக்கப்பட்டுள்ள  எடப்பாடி தொகுதி அதிமுக தேர்தல் அலுவலகத்தை முதல்வர் திறந்து வைத்தார்.  முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், எஸ்.செம்மலை மற்றும் பாமக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT