மாட்டு வண்டியில் ஏர் கலப்பையுடன் ஊர்வலமாக வந்து மனுத் தாக்கல் செய்த நத்தம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தார்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நத்தம் சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் சிவசங்கரன் போட்டியிடுகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன்னதாகவே வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இவர், தொகுதியின் பல்வேறு இடங்களிலும் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நத்தம் தொகுதியில் போட்டியிடுவதற்கு சிவசங்கரன் திங்கள்கிழமை வேட்பு மனு அளித்தார்.
நத்தம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக மாட்டு வண்டியில் ஏர் கலப்பையுடன் ஊர்வலமாக நத்தம் வட்டாட்சியர் அலுவலகம் நோக்கி வந்தார். அந்த மாட்டு வண்டியில் திருவள்ளூவர், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், சீமான் ஆகியோரின் படங்கள் வைக்கப்பட்டிருந்தது.
வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலருமான திருமலையிடம் சிவசங்கரன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
வேளாண்மைத் தொழிலே பிரதான வாழ்வாதாரமாக அமைந்துள்ள நத்தம் தொகுதியில், விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு நியாயமான விலை கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தனியார் கல்லூரியை மட்டுமே நம்பியுள்ள நத்தம் பகுதி இளைஞர்களின் உயர் கல்வி கனவை நனவாக்கும் வகையில், நத்தத்தில் அரசுக் கலைக் கல்லூரி அமைக்கக் குரல் கொடுப்பேன்.
கடந்த 40 ஆண்டுகளாக நத்தம் சட்டப்பேரவைத் தொகுதியில் உறுப்பினர்களாக இருந்தவர்கள், மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கு எவ்வித திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. அந்த குறையை நான்(சிவசங்கரன்) தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் நிவர்த்தி செய்வேன் என்றார்.