தனது அரசியல் பேரவை வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் தெரிவித்தார்.
விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் அரசியலுக்கு வர வேண்டும் என இளைஞர்கள், மக்கள் பாதை இயக்கத்தினர் பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து சகாயம் இதனை ஏற்றுக்கொண்டு அவரது சகாயம் அரசியல் பேரவை வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் களம் காண்கிறது.
சகாயம் அரசியல் பேரவை 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சகாயம் தெரிவித்துள்ளார். மேலும் 10 தொகுதிகளில் வேட்பாளர்கள் பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார்.
வரும் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் தனது அரசியல் பேரவை சார்பில் இளைஞர்கள் போட்டியிடுவார்கள் என்றும் கூறிய அவர், அரசியல் பேரவை சார்பாகப் போட்டியிடும் 20 வேட்பாளர்களும், கூட்டணியில் உள்ள தமிழ்நாடு இளைஞர் கட்சி, வளமான தமிழகம் கட்சிகளின் சின்னங்களில் போட்டியிடுவார்கள் என்றார்.
கூட்டணியில் உள்ள தமிழ்நாடு இளைஞர் கட்சி 15 தொகுதிகளிலும், வளமான தமிழகம் கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது.
இந்த மூன்று அமைப்புகளும் இணைந்து மொத்தம் 36 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.