தமிழ்நாடு

திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் வேலை நிறுத்தம்: ரூ.200 கோடி வர்த்தகம் பாதிப்பு

15th Mar 2021 04:00 PM

ADVERTISEMENT

 

திருப்பூரில் நூல் விலை உயர்வைக் கண்டித்து பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் ரூ.200 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், தொழில்துறையினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான  நூல் விலையானது கடந்த 6 மாதத்தில் கிலோவுக்கு ரூ.70 வரையில் அதிகரித்துள்ளது. இதனால் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. ஆகவே, நூல் விலை உயர்வைக் கண்டித்து திருப்பூரில் உள்ள 27 பின்னலாடை உற்பத்தி சார்ந்த சங்கங்கள், 8 மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் திங்கள்கிழமை அடையாள வேலைநிறுத்தம், கடையடைப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்து. 

இந்த நிலையில், திருப்பூரில்  பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச்சார்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. ஆனால் மாநகரின் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்பட்டிருந்தன. மேலும், வணிகர்கள் சங்கங்கள் தொழில் துறையினரின் வேலை நிறுத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

ADVERTISEMENT

ஆர்ப்பாட்டத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு: இதனிடையே, திருப்பூர் குமரன் சிலையிலிருந்து மாநகராட்சி வரையில் பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தேர்தல் நடத்தை விதி காரணமாக காவல் துறை அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, திருப்பூர் குமரன் சிலை முன்பாக தொழில்துறையினர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், திருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்தி சார்ந்த சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள், பின்னலாடைத் தொழிலாளர்கள் என 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், தொழில் துறையினருக்கு ஆதரவாக திருப்பூர் மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன், திருப்பூர் வடக்கு தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரும், மாவட்டச் செயலாளருமான எம்.ரவி, திருப்பூர் தெற்கு தொகுதி திமுக வேட்பாளரும், மத்திய மாவட்ட பொறுப்பாளருமான க.செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜா எம்.சண்முகம் கூறியதாவது: 

திருப்பூர் பின்னலாடை உற்பத்திக்கான முக்கிய மூலப் பொருளான நூல் விலையானது கடந்த 4 மாதமாகத் தொடர்ந்து ஏறிவருகிறது. ஆகவே, மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மேலும், தற்போது நூல் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

ஆகவே, தொழில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் சார்பில் இயற்றப்பட்டுள்ள கூட்டு தீர்மானத்தை மாவட்ட ஆட்சியர் மூலமாக அரசுக்குத் தெரிவிக்கும் வகையில் மனுவாக அளிக்கவுள்ளோம். இந்த வேலைநிறுத்தத்தில் விளைவை மத்திய அரசிடம் தெரிவித்து நூல் விலையைக் கட்டுப்படுத்தவும், அதனை முறைப்படுத்திக் கொடுக்கும் வகையில் ஒரு அமைப்பையும் மத்திய அரசு ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். திருப்பூரின் இன்றைய ஒருநாள் வேலைநிறுத்தம் காரணமாக ரூ.200 கோடி வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT