தமிழ்நாடு

தாராபுரத்தின் வளர்ச்சியில் தனிக்கவனம் செலுத்தப்படும்: எல்.முருகன்

15th Mar 2021 06:05 PM

ADVERTISEMENT

 

திருப்பூர்: தாராபுரம் தனி தொகுதியின் வளர்ச்சியில் தனிக்கவனம் செலுத்தப்படும் என்று அத்தொகுதி பாஜக வேட்பாளரும், மாநிலத் தலைவருமான எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தாராபுரம் தனி தொகுதியானது அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் அமராவதி சிலை அருகே அவருக்கு கூட்டணிக் கட்சி நிர்வாகிகளின் சார்பில் திங்கள்கிழமை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, புறவழிச்சாலையில் உள்ள தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தல் பணிமனையை எல்.முருகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதையடுத்து, அதிமுக,  பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகளிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். இதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மத்திய, மாநில அரசும் இணையும் போது நிச்சயமாக நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும். இதற்கு உதரணமாகத்தான் தமிழகத்துக்கு ரூ.5 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படும்போது இந்த ஊரின் வளர்சியைக் கருத்தில் கொள்ள முடியும். இந்தப் பகுதிக்குத் தேவையான மருத்துவக் கல்லூரி, அரசு கலைக்கல்லூரி கொண்டுவரமுடியும். அதே போல, கிடப்பில் உள்ள ரயில்வே திட்டங்களைக் துரிதப்படுத்திக் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும்.  விதைப்பண்ணை மிகிவும் முக்கியமானதாகும். தாராபுரம் நெல் விதைகளைக் கொடுக்கும் ஊராக உள்ளது. ஆகவே, நொல் விதைகளை இந்தியா முழுவதும் கொடுப்பதற்காக சிறப்பு பொருளாதார மண்டலத்தைக் கொண்டுவரமுடியும். தாராபுரத்தின் மேம்பாடு, வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டும் எங்களது பணிகள் இருக்கும் என்றார். இந்த சந்திப்பின்போது, அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT