தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற்றார் தினகரன்; சசிகலாவின் நிலைப்பாடு?

15th Mar 2021 01:11 PM

ADVERTISEMENT

சென்னை:  அதிமுக பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்து இயற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் 9-ஆம் தேதிக்கு  சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 12 -ஆம் தேதி நடந்தது. அப்போது, கட்சியின் பொதுச்செயலாளர் பதவி ரத்து செய்து தீர்மானம் இயற்றப்பட்டது. அந்த பதவிகளுக்குப் பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகளை உருவாக்கி,  அந்த பதவிகளுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நியமித்து தீர்மானம் இயற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா உரிமையியல் வழக்குத் தொடர்ந்தார். 

அந்த மனுவில், இந்த தீர்மானம் சட்டவிரோதமானது. எனவே அதை ரத்து செய்ய வேண்டும். மேலும், அதிமுக தொண்டர்களின் பெயர் விவரங்கள் கொண்ட ஆவணங்கள் எதையும் திருத்தாமல் பாதுகாக்கவும், அதிமுக பெயரில் உள்ள வங்கிக் கணக்குகளின் அறிக்கையை வழங்கவும், அதிமுக கட்சி அலுவலக மேலாளர் மகாலிங்கத்துக்கு  உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்தது. பின்னர், ரூ.1 கோடி மதிப்புக்கு கீழ் உள்ள வழக்கு என்பதால், வழக்கை சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு மாற்ற உயர்நீதிமன்ற பதிவுத்துறைக்கு பரிந்துரை செய்தது. 

இந்த வழக்கு சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ரவி முன்பு விசாரனைக்கு வந்தது. அப்போது அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யபட்டது. அதில், தேர்தல் ஆணையம் ஏற்கனவே இந்த மனுவை நிராகரித்துள்ளது. அதனை உச்சநீதிமன்றமும் ஏற்று கொண்டுள்ளது. எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார். 

ADVERTISEMENT

அப்போது டிடிவி தினகரன் தரப்பில், தற்போது அமமுக என்ற கட்சியை  தொடங்கி நடத்தி வருவதால் இந்த வழக்கில் இருந்து  விலகி கொள்வதாக தெரிவிக்கபட்டது.மேலும், சசிகலா தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்துவதா அல்லது மனுவை திரும்ப பெறுவதா என்பது  குறித்து சசிகலாவிடம்  கேட்டு தெரிவிப்பதாக கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT