பண்ணாரிஅம்மன் கோவில் குண்டம் திருவிழாவையொட்டி இன்று திங்கள்கிழமை பூச்சாட்டு நடைபெறுகிறது. இதில் காளிதிம்பம்த்தைச் சேர்ந்த பாரம்பரிய பூசாரிகள் 5 மலைவாழ் பக்தர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் கர்நாடகத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரிமாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறுவது வழக்கம். தமிழகம் கர்நாடகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் விழாவில் பங்கேற்று தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர். கடந்தாண்டு கொரானா நோய்த் தொற்று காரணமாக பண்ணாரி அம்மன் கோவில் நடைசாத்தப்பட்டு குண்டம் விழா ரத்து செய்யப்பட்டது.
கரோனா நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதையடுத்து கடந்தாண்டு நவம்பர் மாதம் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் பிரசித்தி பெற்ற பண்ணாரி கோவில் குண்டம் திருவிழா இன்று திங்கள்கிழமை பூச்சாட்டு விழாவுடன் துவங்குகிறது.
இந்த நிகழ்ச்சியில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கர்நாடக பக்தர்கள் பங்கேற்பதால் இந்தாண்டு நோய்த் தொற்று காரணமாக கர்நாடக பக்தர்கள் பங்கேற்ற தடை விதிக்கப்பட்டது. திங்கள்கிழமை இரவு பூச்சாட்டு நிகழ்ச்சியில் காளியூரைச் சேர்ந்த பாரம்பரிய பூசாரிகள் 5 பேர் மட்டுமே கலந்துகொள்கின்றனர். அதனைத் தொடர்ந்து சுற்றுவட்டார கிராமங்களில் நடைபெறும் சுவாமி திருவீதியுலாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவிலில் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா மார்ச் 30ம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பூசாரி மட்டுமே குண்டம் இறங்குகிறார். பக்தர்கள் இறங்குவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இன்று துவங்கும் குண்டம் விழாவில் பக்தர்கள் இரவு 9 மணி வரை தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. கோவில் இரவில் வளாகத்தில் தங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் வெளியூர் பக்தர்கள் பகலில் மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனக் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.